ஷூட்டிங்கை வேடிக்கை பார்க்க வந்த நபரை வளர்த்துவிட்ட எம்.ஜி.ஆர்.. அட இப்படியெல்லாம் நடந்துச்சா!...
எம்.ஜி.ஆர் நாடக நடிகர், சினிமா நடிகர், அரசியல்வாதி என்பதை தாண்டி நல்ல மனிதராக இருந்ததால்தான் அவர் மீது பலருக்கும் மதிப்பும் மரியாதையும் ஏற்பட்டது. திரையுலகை சேர்ந்த பலருக்கும் எம்.ஜி.ஆர் பல வழிகளில் உதவியுள்ளது பரவலாக எல்லோருக்கும் தெரியும்,. ஆனால், திரையுலகை சாராத பொதுமக்கள் பலருக்கும் எம்.ஜி.ஆர் தன் வாழ்வில் பலமுறை உதவிகளை செய்துள்ளார்.
ஒருமுறை அவர் காரில் சென்று கொண்டிருந்த போது சாலையில் கூட்டம் நின்று கொண்டிருந்தது. ஓட்டுனரை அனுப்பி அங்கு என்ன நடக்கிறது என விசாரித்து வர சொல்லியிருக்கிறார்.. ஒரு குதிரை வண்டிகாரர் அங்கே சோகமாக அமர்ந்திருக்க, அவரின் மனைவி அழுது கொண்டிருந்தார். அவரின் குதிரை இறந்துபோயிருந்தது. இந்த தகவலை எம்.ஜி.ஆரிடம் ஓட்டுனர் கூட அவரை அழைத்த எம்.ஜி.ஆர் ஒரு புதிய குதிரை வாங்குவதற்கான பணத்தை கொடுத்ததோடு மட்டுமில்லாமல் குதிரை வாங்கும் வரை வீட்டு செலவுக்கு பணத்தையும் சேர்த்து கொடுத்தார்.
அதேபோல், அவரின் நடிக்கும் படப்பிடிப்பை பார்க்க வந்த ஒருவரை எம்.ஜி.ஆர் எப்படி வளர்த்துவிட்டார் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம். 1948ம் ஆண்டு அபிமன்யூ படத்தின் படப்பிடிப்பு கோவையில் நொய்யல் ஆற்றங்கரையில் நடந்தது. அப்போது எம்.ஜி.ஆரை பார்ப்பதற்காக முத்து என்பவர் சென்றார்.
தன்னை அவர் வெகுநேரம் பார்த்துக்கொண்டே இருந்ததை கவனித்த எம்.ஜி.ஆர் அவரை அழைத்து விசாரித்தார். மேலும், அங்கு இருந்த நடிகர், நடிகைகளின் உடைகளை பாத்துக்கொள்ளுமாறு அவரிடம் கூறினார். முத்துவும் அதை செய்தார். சில நாட்கள் கழித்து அவரை சென்னைக்கு வரவழைத்து ஒரு தையல் கலைஞர் மூலம் துணி தைக்கும் வேலையை சொல்லி கொடுக்க ஏற்பாடு செய்தார்.
இப்படித்தான் கிராமத்தில் வறுமையில் வாடிய முத்துவை தையல் கலைஞராக மாற்றினார் எம்.ஜி.ஆர். அதன்பின் எம்.ஜி.ஆரின் ஆஸ்தான ஆடை வடிவமைப்பாளராக முத்து மாறினார். அதன்பின் எம்.ஜி.ஆர் நடிக்கும் எல்லா படங்களுக்கும் ஆடைகளை அவர்தான் தயார் செய்தார். எம்.ஜி.ஆர் விதவிதமாக உடைகளை அணிந்து தன்னை இளமையாக காட்டி கொள்வார். அதற்கு ஏற்றார்போல் முத்துவும் அழகிய ஆடைகளை எம்.ஜி.ஆருக்கு தயார் செய்தார். முத்து வாடகைக்கு குடியிருந்த வீட்டிலிருந்து அந்த ஹவுஸ் ஓனர் விரட்டியபோது, ராயப்பேட்டையில் சொந்தமாக அவருக்கு ஒரு வீட்டையும் கொடுத்தார் எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆர் சினிமாவில் நடிப்பதை நிறுத்திய பின் ‘எம்.ஜி.ஆரை தவிர வேறு எந்த நடிகருக்கும் ஆடை தைத்து தரமாட்டேன், ஆடை வடிவமைப்பு செய்ய மாட்டேன்’ எனக்கூறி அந்த தொழிலில் இருந்தே விலகினார் முத்து. தற்போது 90 வயதாகியுள்ள முத்து எம்.ஜி.ஆர் கொடுத்த வீட்டில் இன்னமும் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சோடா கேட்ட நடிகவேள் வாரிசு!.. கிடைக்காத ஆத்திரத்தில் தயாரிப்பாளருக்கு ஏற்படுத்திய நஷ்டம்..