கவலைப்படாதே நீ பெரிய நடிகனாக வருவாய்!.. நம்பிக்கை சொன்ன நட்புக்கு மரியாதை செய்த எம்.ஜிஆர்….

by சிவா |   ( Updated:2023-04-29 01:49:48  )
mgr
X

நடிகர் எம்.ஜி.ஆர் எடுத்தவுடனேயே எல்லாம் பெரிய நடிகராகிவிடவில்லை. நாடகங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துதான் தனது கேரியரை துவங்கினார். பின்னாளில் இவருடன் பல படங்களில் நடித்த பல நடிகர்கள் இவருடன் நாடகங்களில் நடித்தவர்கள்தான். பல நாடகங்களில் நடித்த பின்னரே எம்.ஜி.ஆருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதுவும் நாடகத்தை தயாரித்தவர்களே சினிமா எடுக்க ஆசைப்பட அப்படித்தான் எம்.ஜி.ஆரும் சினிமாவில் நடிக்க துவங்கினார்.

சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அப்படி அவர் நடித்த ஒரு திரைப்படம்தான் சாலிவாஹன். இந்த திரைப்படத்தில் அப்படத்தின் கதாநாயகனோடு சண்டை போடும் காட்சி படமாக்கப்பட்ட போது அந்த நடிகரால் எம்.ஜி.ஆருக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. எனவே, படத்தின் இயக்குனரிடம் எம்.ஜி.ஆரை பற்றி புகார் சொல்லி அவரின் காட்சிகளை குறைக்க சொல்லிவிட்டார். இது எம்.ஜி.ஆருக்கு சோகத்தை ஏற்படுத்தியது.

இதுபற்றி அந்த படத்தில் பணிபுரிந்த சண்டை நடிகருடன் சொல்லி எம்.ஜி.ஆர் புலம்பியுள்ளார். அதற்கு அந்த சண்டை நடிகர் ‘கவலைப்படாதே ராமச்சந்திரா!. உன்னிடம் திறமை இருக்கிறது. கண்டிப்பாக நீ பெரிய நடிகராக வருவாய்’ என நம்பிக்கை கூறியுள்ளார். அவர் கூறியது போலவே எம்.ஜி.ஆரும் படிப்படியாக வளர்ந்து பெரிய நடிகரானார்.

ராஜகுமாரி படத்தில் ஹீரோவாக எம்.ஜி.ஆர் அறிமுகமான போது அந்த சண்டை நடிகருக்கும் வாய்ப்பு வாங்கி கொடுத்தார். பின்னாளில் எம்.ஜி.ஆர் வளர்ந்து பெரிய நடிகரானதும் அந்த நடிகரை தயாரிப்பாளராகவும் மாற்றினார். அவர்தான் சாண்டோ சின்னப்பதேவர். அவர் தயாரிப்பில் எம்.ஜி.ஆர் நடித்த முதல் திரைப்படம் தாய்க்கு பின் தாரம். மொத்தமாக சின்னப்பதேவர் தயாரிப்பில் 16 படங்களில் எம்.ஜி.ஆர் நடித்தது குறிப்பிடத்தக்கது.

எம்.ஜி.ஆர் நல்ல நட்புக்கு மரியாதை கொடுப்பவர் என்பதற்கு இதுவே சாட்சி!..

Next Story