சாப்பாட்டில் முதல் முன்னுரிமை சிவாஜிக்குத்தான்.. எம்ஜிஆர் வீட்டில் நடந்த சம்பவம்

Published On: March 24, 2025
| Posted By : Rohini
sivaji

எம்ஜிஆர் சிவாஜி ஆகிய இருவருமே தாய் பாசத்திற்கு அடிமை என்று சொல்லலாம். அதை இருவரின் படங்களிலும் அப்படியே வெளிப்படுத்தினார்கள். குறிப்பாக எம்ஜிஆர் அவருடைய பல படங்களில் தாய் பாசம் என்றால் என்ன ,தாயின் மீது எந்த அளவு மரியாதையும் அன்பும் செலுத்த வேண்டும் என பல வகைகளில் காட்டி இருக்கிறார். தொழில் முனையில் இருவருக்கும் போட்டி இருந்தாலும் திரைக்கு பின்னாடி இருவருமே மிகவும் நெருங்கிய நண்பர்களாக தான் இருந்து வந்தார்கள்.

ஒரு கட்டத்தில் சினிமா உலகில் மாபெரும் சிகரங்களாக இருந்தவர்கள் தான் எம்ஜிஆர் மற்றும் சிவாஜி. ஆனால் இருவரும் அரசியலுக்குள் குதித்த பிறகு ஒருவருக்கு ஒருவர் விமர்சனம் செய்து பேசுவது மாதிரியான சூழ்நிலை ஏற்பட்டது. ஆனாலும் அது அரசியல் ,இது நட்பு என்ற அடிப்படையில் தான் இருவரும் அதை ஏற்றுக் கொண்டார்கள். ஆனால் ரசிகர்களை பற்றி தான் தெரியுமே.

இப்பொழுது எப்படி அஜித் ரசிகர்களும் விஜய் ரசிகர்களும் மாறி மாறி சண்டையிட்டு கொள்கிறார்களோ அப்படித்தான் எம்ஜிஆர் ரசிகர்கள் மற்றும் சிவாஜி ரசிகர்கள் மாறி மாறி சண்டை போட்டுக் கொண்டனர். இந்த நிலையில் பிரபல நடிகர் மேஜர் சுந்தர்ராஜன் இருவரின் நட்பை பற்றி ஒரு பழைய பேட்டியில் கூறியது இப்போது வைரலாகி வருகின்றது. இது சிவாஜியே மேஜர் சுந்தர்ராஜனிடம் சொன்ன தகவலாம் .

எம்ஜிஆர் உடல்நிலை சரியில்லாத போது அமெரிக்காவில் இருந்து சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த நேரம். அப்போது எம்ஜிஆரை பார்க்க சிவாஜி அங்கு சென்றாராம். இருவரும் ஒரு 15 நிமிடம் பேசாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தார்களாம். இருவர் கண்களிலும் கண்ணீர் தத்தளித்து வந்ததாம். அதன் பிறகு தான் பேசவே ஆரம்பித்தார்களாம் .இதை சிவாஜி மேஜர் சுந்தர்ராஜனிடம் சொன்னபோது ‘அப்புறம் ஏன் தேவையில்லாமல் உங்களுடைய ரசிகர்கள் உங்களுக்கும் எம்ஜிஆருக்கும் சண்டை என பேசிக்கொள்கிறார்கள்’ என்ற ஒரு கேள்வியை கேட்டு இருக்கிறார்.

அதற்கு சிவாஜி ‘நான் சொந்த ஊரிலிருந்து இங்கு நாடகத்தில் நடிக்க வந்த போது நான் சாப்பிட்டதே எம்.ஜி.ஆர் வீட்டில் தான்’ என்று சொன்னாராம் .இதைக் கேட்டதும் மேஜர் சுந்தராஜனுக்கு அதிர்ச்சியாகி விட்டதாம். அப்படியா என கேட்டிருக்கிறார் .அதற்கு சிவாஜி ‘ஆமாம். சில நேரங்களில் நான் நாடகங்களில் நடித்து விட்டு அவர் வீட்டுக்கு வர தாமதமாகிவிடும் .அந்த நேரத்தில் எம்ஜிஆர் அவர் அம்மாவிடம் அம்மா பசிக்குது என மலையாளத்தில் கேட்பாராம். அதற்கு அவருடைய அம்மா இருடா கணேசன் வரட்டும் என்று சிவாஜி வரும் வரை காத்திருந்து அதன் பிறகு தான் சிவாஜிக்கும் எம்ஜிஆருக்கும் உணவு பரிமாறுவாரம் எம்ஜிஆரின் தாயார்’. இதை அந்த பேட்டியில் மேஜர் சுந்தர்ராஜன் கூறினார்.