சொந்த படம் எடுத்தால் மொத்தமா காலி!.. நடிகர்களின் வரலாற்றை மாற்றிய எம்.ஜி.ஆர்...
சினிமாவில் சொந்த படமெடுக்கும் ஆசை பெரும்பாலான நடிகர்களுக்கும் வரும். பல நடிகைகளும் இதை முயற்சி செய்துள்ளனர். அப்போது எம்.ஜி.ஆர், சிவாஜி, அசோகன், சந்திரபாபு என பலரும் சொந்த படம் எடுத்துள்ளனர். ஆனால், அதில் சிலரே வெற்றி பெற்றனர். பலருக்கும் தயாரிப்பு என்பது கசப்பான அனுபவமாகத்தான் இருந்தது.
நாடகங்களில் இருந்து சினிமாவில் நடிக்க வந்த எம்.ஜி.ஆர் நாடக அனுபவம் மற்றும் சினிமா அனுபவம் எல்லாம் சேர்ந்து எம்.ஜி.ஆருக்கு திரைப்படத்தை தயாரிக்கும் ஆசையை ஏற்படுத்தியது. அதனால்தான் அவர் எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் என்கிற நிறுவனத்தை துவங்கினார்.
அவர் தயாரித்து, இயக்கி, நடித்து 1958ம் வருடம் வெளியான திரைப்படம் நாடோடி மன்னன். இப்படத்தில் எம்.ஜி.ஆர் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். இந்த படத்திற்காக அவர் சம்பாதித்த அனைத்து பணத்தையும் செலவழித்தார். மேலும், கடனும் வாங்கினார். இந்த படம் உருவான போது நிறைய பத்திரிக்கைகள் நெகட்டிவாகவே எழுதினார்கள். எம்.ஜி.ஆருக்கு முன்னோடிகளாக இருந்த பி.யு சின்னப்பா சொந்த பணம் எடுத்து மொத்த சொத்தையும் இழந்தார். அதேபோல், தியாகராஜ பாகவதரும் சொந்த பணம் எடுத்து சொத்தை இழந்தார். அதோடு, டி.ஆர்.மகாலிங்கமும் சொந்த பணத்தை எடுத்து தோல்வி அடைந்து சொந்த ஊருக்கு போனார்.
எனவே, எம்.ஜி.ஆர் சொந்த பணம் எடுத்ததால் அவரும் அவர்களின் லிஸ்ட்டில் சேரப்போகிறார் என பத்திரிக்கைகள் எழுதின. இதைப்பற்றி கருத்து தெரிவித்த எம்.ஜி.ஆர் ‘நாடோடி மன்னன் ஓடினால் நான் மன்னன். தோல்வி அடைந்தால் நான் நாடோடி’ என சொன்னார். நாடோடி மன்னன் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இந்தியாவிலேயே பெரிய தியேட்டர் மதுரையில் உள்ள தங்கம் தியேட்டர். 2 ஆயிரம் பேர் வரை படம் பார்க்க முடியும். இந்த தியேட்டரில் நாடோடி மன்னன் 100 நாட்களுக்கு மேல் ஓடியது. எம்.ஜி.ஆர் அறிமுகமாகும் காட்சியில் ரசிகர்கள் தங்களின் கையில் கற்பூரம் ஏற்றி காட்டினர். வசூலில் சக்கை போடு போட்டது. எம்.ஜி.ஆரை வசூல் மன்னன் என நிரூபித்த படமாக நாடோடி மன்னன் இருந்தது.