எம்.ஜி.ஆர் அந்த நாடகத்துல மட்டும் நடிச்சிருந்தார்ன்னா சிவாஜியோட பெயரே மாறியிருக்கும்… என்னப்பா சொல்றீங்க!!
அறிஞர் அண்ணா இயற்றிய “சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம்” என்ற நாடகத்திற்கு தந்தை பெரியார் தலைமை தாங்க, அதில் மராட்டிய மன்னர் சிவாஜியின் வேடத்தில் மிகச் சிறப்பாக நடித்திருந்தார் ஒரு நடிகர். அவரின் நடிப்பை பார்த்து அசந்துப்போன தந்தை பெரியார், அந்த நடிகரின் பெயரான கணேசன் என்ற பெயருக்கு முன் சிவாஜி என்ற பெயரை சூட்டினார். அவ்வாறுதான் சிவாஜி கணேசனுக்கு சிவாஜி என்ற பெயர் வந்தது.
ஆனால் அண்ணா எழுதிய “சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம்” நாடகத்தில் முதலில் நடிக்க இருந்தது எம்.ஜி.ஆர்தான். ஆம். அதாவது “சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம்” நாடகத்தில் அறிஞர் அண்ணா எழுதிய வசனங்களை படித்துப் பார்த்த எம்.ஜி.ஆர், அந்த வசனங்களில் தனது கொள்கைகளுக்கு மாறாக பல விஷயங்கள் இடம்பெற்றிருந்ததால் அதில் நடிக்க தயக்கம் காட்டினார்.
அண்ணாவிடம் சில வசனங்களை மாற்றியமைக்கச் சொல்லலாமா என்று கூட எம்.ஜி.ஆர் சிந்தித்தார். ஆனால் அறிஞர் அண்ணா போன்ற மிகப்பெரிய மேதையிடம் எவ்வாறு வசனங்களை மாற்றச் சொல்லிக்கேட்பது எனவும் யோசித்தார்.
இந்த தயக்கத்தை தனது நண்பர் ஒருவரிடம் எம்.ஜி.ஆர் கூற, அந்த நண்பர் நேராக அண்ணாவிடம் சென்று அதனை கூறிவிட்டார். அதனை கேட்டுக்கொண்ட அண்ணா “தாராளமாக வசனங்களை ராமச்சந்திரன் மாற்றிக்கொள்ளட்டும். எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை” என கூறியிருக்கிறார்.
எனினும் எம்.ஜி.ஆர் தனது சகோதரரான சக்ரபாணியிடம் வந்து இது குறித்து விசாரித்தார். அதற்கு அவர் “அண்ணா எவ்வளவு பெரிய தலைவர். அவரது வசனங்களை நீ மாற்றப்போகிறாயா? அப்படி செய்தால் நல்லா இருக்குமா என்ன? அப்படி செய்யாதே, இப்போதைக்கு அந்த நாடகத்தில் இருந்து விலகிக்கொள்” என்று யோசனை கூறினாராம். அதன்படி எம்.ஜி.ஆர் அந்த நாடகத்தில் இருந்து விலகிவிட்டாராம். அதன் பிறகுதான் “சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம்” நாடகத்தில் சிவாஜி நடித்திருக்கிறார்.
ஒருவேளை அதில் சிவாஜி நடிக்கவில்லை என்றால் சிவாஜி என்ற பெயர் அவருக்கு கிடைத்திருக்குமா என்பது கேள்விக்குறியே…