எம்.ஜி.ஆருக்கு மட்டுமில்ல… இவங்க எல்லாருக்குமே இதுதான் முதல் படம்… யார் யார்ன்னு தெரியுமா??
புரட்சி தலைவர், மக்கள் திலகம் என்று போற்றப்படும் எம்.ஜி.ஆர், 1936 ஆம் ஆண்டு “சதிலீலாவதி” என்ற திரைப்படத்தின் மூலம்தான் அறிமுகமானார் என்பதை சினிமா ரசிகர்கள் பலரும் அறிவார்கள். இத்திரைப்படத்தை எல்லீஸ் ஆர்.டங்கன் இயக்கியிருந்தார். மருதாச்சலம் செட்டியார் என்பவர் இத்திரைப்படத்தை தயாரித்திருந்தார்.
பின்னாளில் மிகப் புகழ் பெற்ற ஜெமினி ஸ்டூடியோஸின் நிறுவனராக திகழ்ந்த எஸ்.எஸ்.வாசன் இத்திரைப்படத்திற்கு கதையமைத்திருந்தார். இதில் எம்.கே.ராதா கதாநாயகனாக நடிக்க, எம்.ஆர்.ஞானம்மாள் கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் இதில் டி.எஸ்.பாலையா, என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோர் நடித்திருந்தனர்.
எம்.ஜி.ஆர் முதன்முதலாக அறிமுகமான திரைப்படம் “சதிலீலாவதி”தான் என்ற செய்தி நமக்கு தெரிந்திருந்தாலும் பலருக்கும் தெரியாத ஒரு சிறப்பம்சம் இத்திரைப்படத்தில் இருக்கிறது.
அதாவது இத்திரைப்படம் எம்.ஜி.ஆருக்கு மட்டுமல்ல, கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் நடித்து வெளிவந்த முதல் திரைப்படமும் இதுதானாம். அதே போல் பிரபல காமெடி நடிகராக திகழ்ந்த டி.எஸ்.பாலையாவுக்கும் “சதிலீலாவதி”தான் முதல் திரைப்படம்.
இது மட்டுமல்லாது ஜெமினி ஸ்டூடியோஸின் நிறுவனரான எஸ்.எஸ்.வாசன் கதை எழுதிய முதல் திரைப்படமும் இதுதானாம். அதன் பிறகுதான் ஜெமினி ஸ்டூடியோஸை தொடங்கி, பல பிரம்மாண்ட திரைப்படங்களை தயாரித்து இயக்கினார் எஸ்.எஸ்.வாசன்.
எம்.ஜி.ஆர், என்.எஸ்.கிருஷ்ணன், டி.எஸ்.பாலையா, எஸ்.எஸ்.வாசன் ஆகிய தமிழ் சினிமாவின் ஜாம்பவான்கள் தற்செயலாக ஒரே திரைப்படத்தில் அறிமுகமாகியிருப்பதை நினைத்துப் பார்க்கையில் வியப்பாகத்தான் இருக்கிறது.