சும்மா ஒரு பேச்சுக்கு சொன்ன ஸ்டண்ட் நடிகர்.. உடனே நிறைவேற்றிய எம்.ஜி.ஆர்!…
நடிகர் எம்.ஜி.ஆரை கொடை வள்ளல் என்று சும்மாவெல்லாம் சொல்லவில்லை. அவர் அறிந்து யாரும் பசியோடு இருக்கக் கூடாது என நினைக்கும் மனிதர் அவர். ஏனெனில், சிறுவனாக இருக்கும்போதும், வாலிபனாக இருக்கும்போதும் வறுமையின் உச்சத்தை அவர் பார்த்துள்ளார். பல நாட்கள் பட்டினி கிடந்துள்ளார்.
நாடகங்களில் நடிக்க துவங்கி அதில் கிடைக்கும் பணத்தில்தான் அவரின் வீட்டில் உலை எரியும். அதன்பின் சினிமாவில் நடிக்க துவங்கி ஓரளவுக்கு நல்ல சம்பளம் வாங்கிய பின்புதான் அவரை விட்டு வறுமை விலகியது. அதனால், தன்னால் முடிந்த வரை மற்றவர்களின் வறுமையை போக்க வேண்டும் என நினைப்பவர். அதனால்தான் சம்பாதித்த பணத்தை ஏழை எளியோருக்கும், கஷ்டப்படுபவர்களுக்கும் வாரி வாரி கொடுத்தார்.
ஒருமுறை புதிய பூமி என்கிற திரைப்படத்தில் எம்.ஜி.ஆர் நடித்து வந்தார். அந்த படத்தில் ஒரு சண்டை காட்சி எடுக்கப்பட்டது. டைனிங் டேபிளில் பிரியாணி, சிக்கன் வருவல் போன்ற அசைவ உணவுகள் வைக்கப்பட்டு சண்டை நடிகர்கள் அந்த டேபிள் மீது போய் விழுவது போல் காட்சி எடுக்கப்பட்டது.
இதைப்பார்த்த சண்டை நடிகர் ஒருவர் ‘இந்த உணவெல்லாம் கீழே விழுந்து யாரும் சாப்பிட முடியாமல் போகும். இதை நமக்கு கொடுத்தால் நம் வீட்டில் உள்ள பிள்ளைகளாவது சாப்பிடுவார்கள்’ எனக்கூறியுள்ளார். அந்த சண்டை காட்சி முடிந்து அந்த நடிகர் வீட்டிற்கு சென்றபோது அவரின் குழந்தைகள் பிரியாணியும், சிக்கன் வருவலும் சாப்பிட்டு கொண்டிருந்தனராம். இதை வாங்க ஏது பணம்? என அவர் கேட்டபோது ‘எம்.ஜி.ஆர் வாங்கி அனுப்பினார்’ அவர்கள் சொன்னார்களாம். படப்பிடிப்பில் நாம் ஒரு பேச்சுக்கு சொன்னதை கேட்டு எம்.ஜி.ஆர் ஹோட்டலில் வாங்கி இதை அனுப்பி வைத்துள்ளாரே என நினைத்து அந்த சண்டை நடிகர் நெகிழ்ந்து போனாராம்.
இதையும் படிங்க: மாசம் பொறந்தா 5 கோடியை வைக்கனும்!.. காம்ப்ரமைஸ் ஆகாத அஜித்.. சன்பிக்சர்ஸுடன் இருக்கும் பிரச்சினையே இதுதான்..