தன் சம்பளத்தை குறைத்து சக நடிகரின் சம்பளத்தை உயர்த்திய எம்.ஜி.ஆர்… அபூர்வமா இருக்கே!
எம்.ஜி.ஆர் மிகப்பெரிய கொடை வள்ளலாக திகழ்ந்தவர் என்பதை நாம் கேள்விபட்டிருப்போம். ஆனால் அவர் முதல்வராவதற்கு முன்பே நடிகராக இருக்கும்போதே வள்ளல்தன்மையோடு இருந்திருக்கிறார் . அப்படி அவர் என்ன செய்தார் என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.
1959 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர், ஜமுனா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “தாய் மகளுக்கு கட்டிய தாலி”. இத்திரைப்படத்தை ஆர்.ஆர்.சந்திரன் என்பவர் இயக்கியிருந்தார். பேரறிஞர் அண்ணா இத்திரைப்படத்திற்கு கதை வசனம் எழுதியிருந்தார்.
இத்திரைப்படத்தில் நடிகர் காகா ராதாகிருஷ்ணன் ஒரு சிறு கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது காகா ராதாகிருஷ்ணனிடம் எம்.ஜி.ஆர், “உங்களுக்கு என்ன சம்பளம் கொடுக்கிறார்கள்?” என கேட்டாராம். அதற்கு காகா ராதாகிருஷ்ணன், “எனக்கு மூவாயிரம் ரூபாய் சம்பளம் தருகிறார்கள்” என கூறினாராம்.
உடனே எம்.ஜி.ஆர், அத்திரைப்படத்தின் தயாரிப்பாளரை அழைத்து, “என்ன அண்ணனுக்கு இவ்வளவு கம்மியா சம்பளம் தர்ரீங்க. அண்ணனுக்கு ஐந்தாயிரம் சம்பளம் தாருங்கள்” என கூறினாராம். வெறுமனே அவர் அவ்வாறு கூறவில்லை. “என்னுடைய சம்பளத்தில் இருந்து 2000 ரூபாயை பிடித்துக்கொண்டு அவருக்கு 5000 ரூபாய் கொடுங்கள்” என கூறியிருக்கிறார். இந்த செய்தியை கேள்விப்படும்போது ஒரு பக்கம் வியப்பு ஏற்படுவதை தவிர்க்கமுடியவில்லை. ஒரு மனிதர் இந்தளவுக்கா கொடை வள்ளலாக இருக்கமுடியும்!