இதெல்லாம் ஒரு நடிப்பா?!.. கலாய்த்த சிவாஜி... பதிலடி கொடுத்த எம்.ஜி.ஆர்...
எம்.ஜி.ஆரும், சிவாஜியும் திரையுலகில் போட்டி நடிகர்களாக இருந்தாலும் நிஜ வாழ்வில் அண்ணன் - தம்பி உறவில்தான் இருந்தனர். சிவாஜியை விட எம்.ஜி.ஆர் வயதில் மூத்தவர் என்பதால் இருவரும் சிறுவர்களாக நாடகங்களில் நடிக்கும்போது எம்.ஜி.ஆரை அண்ணன் என சிவாஜி பாசமாக அழைத்தவர். எம்.ஜி.ஆரும் ‘தம்பி கணேசா’ என அன்பு வைத்திருந்தார். அப்போதெல்லாம் பல நாடக கம்பெனிகள் இருந்தன. எம்.ஜி.ஆர் ஒரு நிறுவனத்திலும், சிவாஜி ஒரு நிறுவனத்திலும் வேலை பார்த்தார்கள்.
சிவாஜி நடித்த நாடக்குழுவில் சில நாட்கள் வேலை இல்லாதபோது அவருக்கு உணவளித்தவர் எம்.ஜி.ஆர். ஒரே அறையில் தங்கி, ஒரே உணவை சாப்பிட்டு வளர்ந்தவர்கள். ஆனால், சினிமாவில் இருவரும் போட்டி நடிகர்களாக இருந்தது காலத்தின் கோலமாக இருந்தது. எம்.ஜி.ஆர் ஆக்ஷன் படங்களையும், சிவாஜி நடிப்பிற்கு முக்கியத்துவம் உள்ள கதைகளையும் தேர்ந்தெடுத்து நடித்தனர். அதனால் எம்.ஜி.ஆர் சூப்பர்ஸ்டாராகவும், சிவாஜி சிறந்த நடிகராகவும் மாறிப்போனார்கள்.
திரையுலகை பொறுத்தவரை ஒருவரை ஒருவர் எந்த இடத்திலும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். சிவாஜியே சிறந்த நடிகர் என பல மேடைகளில் பேசியவர் எம்.ஜி.ஆர். ஆனால், அவர்களுக்குள் அரசியல் புகுந்து பிளவை ஏற்படுத்தியது. வேறு வழியில்லாமல் ஒருவரை ஒருவர் தாக்கி பேசிய சம்பவங்களும் நடந்தது.
ஏனெனில் சிவாஜி காங்கிரஸை ஆதரிக்க எம்.ஜி.ஆரோ திராவிட சிந்ததாத்தின் மீது இருந்த ஆர்வத்தில் திமுகவை ஆதரித்தார். எனவே, அரசியல்மேடைகளில் ஒருவருக்கு எதிராக ஒருவர் கருத்துக்களை தெரிவித்தனர். ஒருமுறை ஒரு மேடையில் பேசிய சிவாஜி ‘கத்தி சண்டை போடுவது மட்டும் நடிப்பா?’ என கேட்டுவிட்டார். இதற்கு பதிலடி கொடுத்த எம்.ஜி.ஆர் ‘கத்தி சண்டை போடுவது மட்டும் நடிப்பா என கேட்கிறார்கள்.. அப்படியெனில் ‘கத்தி கத்தி பேசுவது மட்டும் நடிப்பார்?’ என கேட்டார்.
அதன்பின் பல வருடங்கள் கழித்து ஒரு மேடையில் பேசிய சிவாஜி ‘ஒரே அறையில் உறங்கி.. ஒரே உணவை சாப்பிட்டு அண்ணன் தம்பியாய் இருந்த எங்கள் உறவை இந்த அரசியல் சீரழித்துவிட்டது’ என வெளிப்படையாகவே பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.