“அன்பே வா” படத்தில் தொழிலாளியாக வேலை பார்த்த மூத்த நடிகர்… பார்த்தவுடன் ஷாக் ஆன எம்.ஜி.ஆர்!!
எம்.ஜி.ஆரின் புகழையும் பெருமையையும் குறித்து நாம் தனியாக கூறத் தேவையில்லை. அந்த அளவுக்கு தனது குணத்தாலும் மனத்தாலும் மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவர். அவரது தாராள குணமும், மரியாதை கலந்த பண்பும் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
இந்த நிலையில் மூத்த நடிகர் ஒருவரை தனது திரைப்படத்தின் படப்பிடிப்பில் தொழிலாளியாக பார்த்தபோது எம்.ஜி.ஆர் அவரிடம் நடந்துகொண்ட விதத்தை குறித்த ஒரு தகவலை இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
1966 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர், சரோஜா தேவி, நாகேஷ் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “அன்பே வா”. இத்திரைப்படத்தை ஏ.சி.திருலோகச்சந்தர் இயக்கியிருந்தார். ஏவிஎம் நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரித்திருந்தது.
“அன்பே வா” திரைப்படத்தின் படப்பிடிப்பிற்கான செட் ஏவிஎம் ஸ்டூடியோவில் போடப்பட்டபோது, அந்த செட்டை பார்க்க எம்.ஜி.ஆர். வந்தாராம். அப்போது அங்கே பணியாற்றிக்கொண்டிருந்த ஒரு தொழிலாளியை பார்த்த எம்.ஜி.ஆர் அப்படியே ஸ்தம்பித்து நின்றுவிட்டாராம்.
நேராக அவரிடம் சென்ற எம்.ஜி.ஆர், “அண்ணே, எப்படி இருக்குறீங்க?” என கேட்டு அப்படியே கட்டிப்பிடித்துவிட்டாராம். அந்த நபர் அந்த தளத்தில் பேப்பர் ஒட்டிக்கொண்டிருந்ததால் அவரது கை நிறைய பசை இருந்தது. ஆனால் எம்.ஜி.ஆர் அதை எல்லாம் கண்டுக்கவில்லையாம். அப்படியே அவரை கட்டிபிடித்தாராம். எம்.ஜி.ஆர் அப்படி கட்டிபிடித்ததும் அந்த நபரின் கண்களில் தாரை தாரையாக கண்ணீர் வந்துவிட்டதாம்.
உடனே தனது உதவியாளரை அழைத்த எம்.ஜி.ஆர், அந்த நபரை மேக்கப் அறைக்கு அழைத்துச் செல்லும்படியும், அவரை நான் சிறிது நேரத்தில் பார்க்க வருவதாகவும் கூறினாராம்.
இதையும் படிங்க: “இனி ஹீரோவா நடிக்கமாட்டேன்”… வடிவேலு எடுத்த அதிரடி முடிவுக்கு டிவிஸ்டு வைத்த விஜய் சேதுபதி…
“அந்த நபர் யார் தெரியுமா? நான் நாடகத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது கதாநாயகன் வேஷம் போட்டுக்கொண்டிருந்தவர். ஆனால் இவர் இங்கே ஸ்டூடியோவில் பேப்பர் ஒட்டிக்கொண்டிருக்கிறார். இதனை பார்க்கும்போது என் மனசு தாங்கலை. அதனால் அவருடன் பேசிவிட்டு வருகிறேன்” என படக்குழுவினரிடம் கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டாராம். அதன் பின் அந்த நபருக்கு வேண்டிய உதவிகளை செய்து நல்லபடியாக வாழ வைத்தாராம் எம்.ஜி.ஆர்.