கவிஞர் வாலி தமிழ் சினிமாவில் பல்லாயிரத்திற்கும் மேற்பட்ட சினிமா பாடல்களை எழுதியுள்ளார். எம்.ஜி.ஆர் தொடங்கி சிவகார்த்திகேயன் வரை தமிழின் பல டாப் ஹீரோக்களுக்கு பாடல்கள் எழுதிய வாலி, தமிழின் வாலிப கவிஞர் என போற்றப்படுபவர்.
தனது வாழ்நாளில் தன்னை காலத்திற்கு ஏற்றார் போல அப்டேட் செய்துகொண்டவர் வாலி. ஆதலால்தான் அவரால் எம்.ஜி.ஆருக்கு “நான் ஆணையிட்டால்” பாடலையும், சிவகார்த்திகேயனுக்கு “எதிர்நீச்சல் அடி” பாடலையும் எழுத முடிந்தது.

இவ்வாறு எப்போதும் தனது பாடல் வரிகளின் மூலம் இளமையாய் வலம் வந்த வாலிக்கும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கும் இடையே நடந்த ஒரு கசப்பான சம்பவத்தை குறித்து தற்போது பார்க்கலாம்.
1967 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, சரோஜா தேவி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “அரச கட்டளை”. இத்திரைப்படத்தின் பாடல் பதிவின்போது கவிஞர் வாலி “ஆண்டவன் கட்டளைக்கு முன்னே அரச கட்டளை என்னவாகும்” என்று தொடங்கும் ஒரு புரட்சிகரமான பாடலை எழுதியிருந்தார். இப்பாடல் அத்திரைப்படத்தில் அரசுக்கு எதிராக புரட்சி செய்யும் கதாநாயகன் பாடும் வகையில் இடம்பெறுமாறு எழுதப்பட்ட பாடல் ஆகும்.

இந்த பாடல் வரிகளை பார்த்த எம்.ஜி.ஆருக்கு கோபம் தலைக்கு ஏறியதாம். உடனே வாலியை அழைத்த எம்.ஜி.ஆர் “என்ன பாடல் எழுதியிருக்கிறாய் நீ? இப்படியா எழுதுவது?” என கத்தினாராம்.
அதற்கு வாலி “நன்றாகத்தானே எழுதியிருந்தேன்” என தயங்கிக்கொண்டே கூறினாராம். அதற்கு எம்.ஜி.ஆர் “இந்தா, நீயே பாரு” என கூறி அப்பாடல் எழுதப்பட்டிருந்த காகிதத்தை அவரிடம் நீட்டினார். அந்த வரிகளை படித்துப்பார்த்த வாலிக்கு அதில் என்ன தவறு இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடியவில்லையாம்.
எனினும் அதன் பின் எம்.ஜி.ஆர் விளக்கிச் சொன்ன பிறகுதான் அவருக்கு தெரிய வந்ததாம். அதாவது சிவாஜி கணேசனின் நடிப்பில் “ஆண்டவன் கட்டளை” என்ற திரைப்படம் அப்போது வெளிவந்திருந்தது. அத்திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்தது.

இந்த நிலையில்தான் வாலி “ஆண்டவன் கட்டளைக்கு முன்னே அரச கட்டளை என்னவாகும்” என்று தொடங்குபடி பாடல் எழுதியிருக்கிறார். அதாவது இந்த வரிகள், ஆண்டவன் கட்டளை திரைப்படத்தை உயர்த்தி பேசும் வகையிலும் அரசக்கட்டளை திரைப்படத்தை தாழ்த்தி பேசும் வகையிலும் இடம்பெற்றிருப்பதாக எம்.ஜி.ஆர் நினைத்துக்கொண்டாராம். இதனால்தான் வாலியின் மேல் கடும் கோபம் கொண்டாராம்.

அதன் பின் எம்.ஜி.ஆர் வாலியிடம் “நீ பாடலே எழுத வேண்டாம். கிளம்பு” என கூறினாராம். இதனை தொடர்ந்து அந்த பாடலை கவிஞர் முத்துக்கூத்தன் எழுதினாராம்.
