வெள்ளி விழா கொண்டாடிய புரட்சித்தலைவர் படங்கள் - ஒரு பார்வை
மக்கள் திலகம் எம்ஜிஆரை பிடிக்காத சினிமா ரசிகர்களே இல்லை. அவர் படத்தில் வந்தாலே ரசிகர்களுக்குள் முக மலர்ச்சியும், எழுச்சியும் வந்து விடும். அவர் ஒரு தனிப்பிறவி.
எப்போதும் பாசிடிவ்வாகவே தனது படங்களில் வசனம் பேசுவார். புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிக்கவே மாட்டார். அவரது நடிப்பில் ஜொலித்த வெள்ளி விழா படங்கள் பற்றிப் பார்க்கலாம்.
ஒளிவிளக்கு
இது எம்ஜிஆரின் 100வது படம். ஜெமினி ஸ்டூடியோ, ஜெமினி பிக்சர்ஸ் சர்க்கியூட் சார்பில் எஸ்.எஸ்.வாசன் இயக்கித் தயாரித்த படம். ஜெமினி நிறுவனத்தில் எம்ஜிஆர் பங்கு கொண்ட முதல் படம் இதுதான்.
1968ல் எம்ஜிஆர், ஜெயலலிதா நடித்த படம். எம்.எஸ்.வி.யின் இசையில் பாடல்கள் அனைத்தும் பட்டையைக் கிளப்பின. தைரியமாகச் சொல், நாங்க புதுசா, ருக்குமணியே, மாம்பழத் தோட்டம், இறைவா உன் மாளிகையில், நீ தான், ஆண்டவனே உன், நான் கண்ட கனவினில் ஆகிய பாடல்கள் உள்ளன.
25 வாரம் ஓடி வெள்ளி விழாக் கொண்டாடிய படம்.
அடிமைப்பெண்
எம்ஜிஆரின் சொந்தப் படம். பிலிம்பேர் விருதும், தமிழக அரசின் விருதும் பெற்ற படம். வெள்ளி விழா கொண்டாடிய படம் இது. 1969ல் எம்ஜிஆர், ஜெயலலிதா, சோ, சந்திரபாபு உள்பட பலர் நடித்துள்ளனர்.
கே.வி.மகாதேவன் இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஜெய்ப்பூரில் நடந்தது. அங்கு எம்ஜிஆர் வெள்ளை நிற தொப்பியை அணிந்தார். அது அவருக்குப் பிடித்து விட்டது. பின்னாளில் அதுவே எம்ஜிஆரின் அடையாளமாகவும் ஆனது.
ஆயிரம் நிலவே வா ன்ற பாடல் இந்தப் படத்தில் தான் இடம்பெற்றது.
மாட்டுக்கார வேலன்
1970ல் வெளியானது. 25 வாரங்கள் ஓடி எம்ஜிஆர் வெள்ளி விழா கொண்டாடியது.
எம்ஜிஆர் இரட்டை வேடங்களில் கலக்கிய படம். ப.நீலகண்டன் இயக்கத்தில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, லட்சுமி, அசோகன், வி.கே.ராமசாமி, சோ உள்பட பலர் நடித்துள்ளனர்.
கே.வி.மகாதேவன் இசை அமைத்துள்ளார். ஒரு பக்கம் பாக்குறா, சத்தியம் நீயே, தொட்டுக் கொள்ளவா, பட்டிக்காடா பட்டணமா, பூ வைத்த பூவைக்கு ஆகிய பாடல்கள் உள்ளன.
ரிக்ஷாக்காரன்
1971ல் வெற்றிக் கொடி நாட்டிய படம். மத்திய அரசின் பாரத் விருதை எம்ஜிஆருக்கு வாங்கித் தந்தது.
இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தம் சொந்த செலவிலேயே சென்னையில் உள்ள 6000 ரிக்ஷாக்காரர்களுக்கு மழைக்கோட்டு வாங்கிக் கொடுத்தார். எம்ஜிஆர், மஞ்சுளா, பத்மினி, மேஜர் சுந்தரராஜன், அசோகன், மனோகர், தேங்காய் சீனிவாசன், சோ உள்பட பலர் நடித்துள்ளனர்.
எம்எஸ்வியின் இசையில் பாடல்கள் 6. அத்தனையும் தேனாறு. கடலோரம் வாங்கிய காற்று, அங்கே சிரிப்பவர்கள், கொல்லிமலைக் காட்டுக்குள்ளே, பொன்னழகு பெண்மை, அழகிய தமிழ் மகன் ஆகிய பாடல்கள் உள்ளன.
உரிமைக்குரல்
ஸ்ரீதரின் இயக்கத்தில் எம்ஜிஆர், லதா, வி.எஸ்.ராகவன், வி.கே.ராமசாமி உள்பட பலர் நடித்த படம் உரிமைக்குரல். இது வெள்ளி விழா கண்டது. சிவாஜியின் இயக்குனரான ஸ்ரீதருக்கு உதவுவதற்காகவே இந்தப் படத்தில் எம்ஜிஆர் நடித்தார்.
இந்தப் படம் 1974ல் வெளியானது. எம்எஸ்.வி.யின் இசையில் பாடல்கள் சூப்பர்ஹிட். ஆம்பளைங்களா நீங்க, கல்யாண வளையலோசை, மாட்டிக்கிட்டரடி, நேத்துப் பூத்தாளே, ஒரு தாய் வயிற்றில், பொண்ணா பொறந்த, விழியே கதை எழுது ஆகிய பாடல்கள் உள்ளன.
உலகம் சுற்றும் வாலிபன்
1973ல் வெளியான படம். எம்ஜிஆரே நடித்து தயாரித்து, இயக்கியுள்ளார். 31 வாரம் ஓடி வரலாறு படைத்தது.
எம்எஸ்.வி.யின் இசையில் அவள் ஒரு நவரச, பன்சாயி, லில்லி மலருக்குக் கொண்டாட்டம், நிலவு ஒரு பெண்ணாகி, பச்சைக்கிளி, சிரித்து வாழ வேண்டும், தங்கத் தோணியிலே ஆகிய எவர்கிரீன் சூப்பர்ஹிட் சாங்ஸ் இந்தப் படத்தில் தான் இடம்பெற்றுள்ளன.
அதே போல் 1956ல் மதுரை வீரன், 1958ல் தாய் மகளுக்குக் கட்டிய தாலி, 1966ல் அன்பே வா ஆகிய படங்களும் வெள்ளி விழா கண்டன.