அந்தக்காலத்தில் எம்ஜிஆர் - சிவாஜி படங்களின் மோதல்கள் எப்படி இருந்தது தெரியுமா?
பெரும்பாலும் 3 எழுத்து நாயகர்கள் என்றால் அவர்கள் வெற்றி பெற்றவர்களாகவே இருப்பார்கள். உதாரணத்திற்கு என்டிஆர், என்எஸ்கே, எம்ஜிஆர், சிவாஜி, நாகேஷ், ரஜினி, கமல், பிரபு, விஜய், அஜீத் என்று சொல்லிக்கொண்டே போகலாம். இவர்களில் சிலருக்கு ஒரே காலகட்டத்தில் ஆரோக்கியமான போட்டிகள் நடப்பதுண்டு. இதைப்பற்றி இக்கட்டுரையில் பார்ப்போம்.
அந்தக்காலத்தில் பெரும்பாலான நடிகர்கள் நாடகக்கலையில் இருந்துதான் சினிமாவுக்கு வந்தார்கள். அவர்களில் முன்னணி ஜாம்பவான்களான தியாகராஜபாகவதர், பி.யூ.சின்னப்பா, என்.எஸ்.கே., டி.ஏ.மதுரம், எம்ஜிஆர், சிவாஜி, எஸ்.எஸ்.ஆர் ஆகியோரும் அடக்கம்.
இதே காலகட்டத்தில் ஜெய்சங்கர், முத்துராமன், எஸ்.எஸ்.ராஜேந்திரன் ஆகியோரும் படங்களில் நடித்து வந்தனர். இவர்களில் கடும்போட்டி யாருக்கு என்றால் எம்ஜிஆர், சிவாஜி ஆகியோருக்குத் தான். ஆனால் இவை ஆரோக்கியமான போட்டி தான். ரஜினி கமல் படங்களின் போட்டி இதற்கு அடுத்த ஜெனரேஷன் என்று சொல்லலாம். இவர்களும் ஆரோக்கியமாகவே போட்டியிட்டனர்.
ஆனால் இரு ஜெனரேஷன்களிலும் நடந்த ஒற்றுமை என்னவென்றால் இவர்கள் ஒற்றுமையாய் இருந்தபோதும் இவர்களது ரசிகர்கள் வில்பூட்டாகவே இருந்துள்ளனர். தங்களின் தலைவரது படங்கள் தான் உச்சம் என்று அடிக்கடி வாதிடுவதும் கட்அவுட், பேனர், திரையரங்குகளில் தோரணங்கள், பாலாபிஷேகம் , வாண வேடிக்கை என்று களேபரங்கள் செய்து யார் பெரியவர் என்று போட்டி போட்டனர்.
ஒரு காலத்தில் கிடா வெட்டி பொங்கல் வைத்த வைபவங்களும் அரங்கேறி உள்ளன. அது சரி. மேட்டருக்கு வருவோம். எம்ஜிஆர் படங்களை பெரும்பாலான ரசிகர்கள் ரசித்தனர். இவர் படங்களில் காதல், நகைச்சுவை, நடிப்பு, அழுகை, சென்டிமென்ட், செட்டிங், பாடல்கள், பைட் என அனைத்துமே சூப்பராக இருக்கும். பெரும்பாலான படங்களில் தத்துவங்களும், தத்துவப்பாடல்களும் இருந்து எக்காலமும் ரசிகர்கள் கேட்கும் வகையில் இருக்கும்.
இவரது படங்களில் பெரும்பாலானவை த வரிசை படங்களாகவே இருக்கும். தலைவன், தாய் சொல்லைத் தட்டாதே, தாயைக் காத்த தனயன், தர்மம் தலைகாக்கும், தாய்க்குப் பின் தாரம் என்று படத்தின் தலைப்புகள் அமைந்து சக்கை போடு போடும். இவை அனைத்துமே வெற்றிப்படங்கள் தான்.
அதேபோல் நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் படங்களைப் பார்த்தால் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டவையாக இருக்கும். பார்க்கும்போதே கண்ணீரை வரவழைத்து விடும் அவரது யதார்த்தமான நடிப்பு. கதாபாத்திரத்துடன் ஒன்றி விடுவார் சிவாஜி.
ஒரு படத்தில் அவர் ஊனமுற்றவராக வருகிறார் என்றால் அதே போலவே மாறிவிடுவார். மிருதங்க வித்வானாகவோ, நாதஸ்வர வித்வானாகவோ வருகிறார் என்றால் படம் பார்க்கும் நமக்கு அவர் உண்மையிலேயே நாதஸ்வர வித்வான் தான் என்று எண்ணத் தோன்றும். அந்த அளவு நடிப்பில் ஜொலிப்பார் சிவாஜி. பாடல்களும் தத்துவங்களாகவே இருக்கும். திரையரங்கில் பக்தி ரசம் சொட்ட சொட்ட யார் படங்களைப் பார்ப்பது என்று நாம் யோசிக்கவே வேண்டாம்.
சிவாஜியின் படங்களைப் பார்த்தால் போதும். அந்த சிவபெருமானே நேரில் தோன்றுவதைப் போல இருக்கும். சரஸ்வதி சபதம், திருவிளையாடல், மகாகவி காளிதாஸ் போன்ற படங்கள் இவரது நடிப்புத் திறனுக்கு சாட்சி. அதே போல இவரது படங்கள் பெரும்பாலும் ப வரிசையில் அமைந்து இருக்கும். படிக்காத மேதை, படிக்காத பண்ணையார், பாகப்பிரிவினை, பாவமன்னிப்பு, பந்தம், பாசமலர், பாலும் பழமும், பலே பாண்டியா, பார்த்தால் பசி தீரும் ஆகிய படங்களை நாம் உதாரணமாகச் சொல்லலாம்.
எம்ஜிஆருக்கும் படகோட்டி, பணக்கார குடும்பம், பாசம், ஆகிய ப வரிசைப்படங்கள் வந்தன. இதே போல சிவாஜிக்கு தங்கச்சுரங்கம், திருவிளையாடல், திருவருட்செல்வர் ஆகிய த வரிசை படங்களும் வந்தன.
எம்ஜிஆருக்கு ஒரு அரசகட்டளை என்றால் சிவாஜிக்கு ஆண்டவன் கட்டளை. ஒளிவிளக்கு என்றால் பச்சைவிளக்கு, காவல்காரன் என்றால் காவல் தெய்ம், எங்கள் தங்கம் என்றால் எங்கள் தங்கராஜா, பாசம் என்றால் பந்தபாசம், சக்கரவர்த்தி திருமகள் என்றால் மிருதங்க சக்கரவர்த்தி, பணம் படைத்தவன் என்றால் பணம், அன்பே வா என்றால் அன்பே ஆருயிரே, தெய்வத்தாய் என்றால் தெய்வமகன், திருடாதே என்றால் திருடன் என்று அமைந்திருக்கும்.
அது மட்டுமா...புதியபூமி என்றால் புதிய வானம், மருதநாட்டு இளவரசி என்றால் மருதநாட்டு வீரன், என் அண்ணன் என்றால் என் தம்பி, தாய்க்குப் பின் தாரம் என்றால் தாய்க்கு ஒரு தாலாட்டு, மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் என்றால், ராஜராஜசோழன், பட்டிக்காட்டு பொன்னையா என்றால் பட்டிக்காடா பட்டணா, குடியிருந்த கோயில் என்றால் அண்ணன் ஒரு கோயில். சபாஷ் மாப்பிள்ளை என்றால், சபாஷ் மீனா, என் தங்கை என்றால் தங்கை என்று போட்டோ போட்டியாகவே தலைப்புகளின் பட்டியல் நீண்டு கொண்டே இருக்கும். இது ரசிகர்களிடையே மேலும் போட்டி மனப்பான்மையை உருவாக்கும்.