Cinema History
எம்.ஜி.ஆர் நடித்து பாதியிலே நின்ற படம்!.. அட என்ன காரணம் தெரியுமா?….
தனது ஆளுமையால் திரையுலகை கட்டி ஆண்டவர் எம்.ஜி.ஆர். சிறுவனாக இருக்கும்போதே நாடகங்களில் நடிக்க துவங்கி வாலிப வயதை எட்டியதும் சினிமாவில் நுழைந்தவர். ராஜகுமாரி படம் துவங்கி பல படங்களில் ஹீரோவாக நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியதோடு மக்களின் மனதில் இடம் பிடித்து முதலமைச்சராகவும் மாறியவர்.
எம்.ஜி.ஆர் எல்லாத்தையும் சரியாக கணக்கு போட்டே செய்வார். இதுதான் கதை, இதுதான் வசனம், இவர்தான் இயக்குனர், இப்போது ரிலீஸ் என திட்டமிட்டு செயல்படும் நடிகர் ஆவார். அதனால் அவரின் டார்கெட் எப்போதும் தப்பாது. ஆனால், அவர் நடித்து பல நாட்கள் படப்பிடிப்பும் நடந்து ஒரு படம் பாதியிலேயே நின்று போனது என்றால் நம்ப முடிகிறதா?.. ஆனால் உண்மையில் அது நடந்தது.
பணத்தோட்டம் படத்திற்கு அடுத்து சரவணா ஃப்லிம்ஸ் நிறுவனம் தயாரிக்க கே.சங்கர் இயக்கத்தில் எம்ஜி.ஆர்,சரோஜா தேவி உள்ளிட்ட பலரும் நடித்து உருவான திரைப்படம் பரமபிதா. ஈஸ்மெண்ட் கலரில் உருவான இந்த திரைப்படத்தை 1961ம் ஆண்டு வெளியிட படக்குழு திட்டமிட்டு படப்பிடிப்பு துவங்கியது. அப்போது ஒரு நாள் லயோலா கல்லூரி முதல்வர் டிசூசா-வை சந்திக்க நேர்கிறது. அப்போது, பரமபிதா படத்தை பற்றி விசாரிக்க அப்படத்தின் கதையை எம்.ஜி.ஆர் அவரிடம் கூறியுள்ளார்.
கதைப்படி எம்.ஜி.ஆர் ஒரு பெண்ணை காதலித்து அந்த காதல் நிறைவேறாமல் போகும். அதோடு, சந்தர்ப்ப சூழ்நிலையால் அவர் பாதிரியராக மாறி ஒரு தேவாலயத்தில் இருப்பார். அப்போது, அவர் காதலித்த அதே பெண் தேவாலயத்திற்கு கன்னியாஸ்திரியாக வருவார். இருவருக்கும் பழைய நியாபகங்கள் வரும். ஆனால், இருவரும் அதை ஒதுக்கிவிட்டு எப்படி இறைப்பணி செய்கிறார்கள் என்பதுதான் கதை. எம்.ஜி.ஆரின் காதலியாக சரோஜா தேவி நடித்திருந்தார்.
கதையை கேட்ட டிசூசா ‘பாதிரியார் மனதில் சபலம் வரக்கூடாது. கதாநாயகன் காதலித்திருக்கிறான். அதனால், அவருக்கு பாதிரியராக தகுதி இல்லை…கதையின் அடிப்படையே தப்பு’ என சொல்ல அவர் சொல்வதை ஏற்றுக்கொண்ட எம்.ஜி.ஆர் 2 ஆயிரம் அடி எடுக்கப்பட்ட பரமபிதா படத்தை நிறுத்திவிட்டார்.
அடுத்தவர்களின் நியாயமான கருத்துக்கு எம்.ஜி.ஆர் எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுப்பார் என்பதற்கு இந்த சம்பவமே பெரிய உதாரணம் ஆகும்.