எம்.ஆர்.ராதாவுடன் சண்டை போடாமலே சண்டை காட்சி எடுத்த எம்.ஜி.ஆர்!.. இது புதுசா இருக்கே!..
எம்.ஜி.ஆர் படங்களில் இடம் பெறும் சண்டை காட்சிகளுக்கு என்றே தனி ரசிகர் கூட்டமே இருந்தது. நாளடைவில் அவர்களே எம்.ஜி.ஆரின் ரசிகர்களாகவும் மாறிப்போனார்கள். பல வருடங்கள் நாடகங்களில் நடித்துவிட்டு சினிமாவுக்கு வந்தாலும் எம்.ஜி.ஆருக்கு சண்டை காட்சிகளில் நடிப்பதில்தான் அதிக ஆர்வம். எனவே, மல்யுத்தம், கத்தி சண்டை ஆகியவற்றை முறையாக கற்றுக்கொண்டார். இவர் நடிக்கும் சரித்திர படங்களில் வாள் வீச்சு சண்டை காட்சிகள் அனல் பறக்கும். பல படங்களில் நம்பியாருடனும், வீரப்பாவுடனும் அசத்தலான சண்டை காட்சிகளில் நடித்துள்ளார். துவக்கம் முதல் இறுதிவரை தன்னை ஒரு ஆக்ஷன் ஹீரோவாகவே காட்டிக்கொண்டார்.
எம்.ஜி.ஆருடன் சில படங்களில் வில்லனாக நடித்தவர் எம்.ஆர்.ராதா. நல்லவன் வாழ்வான் என்கிற படத்திலும் வில்லனாக அவர் நடித்திருந்தார். ஆனால், அவருக்கு சண்டை காட்சியில் நடிக்க வராது. எனவே, அவரை வைத்து எப்படி சண்டை காட்சி எடுப்பது என இயக்குனர் உட்பட படக்குழுவினர் குழப்பத்தில் இருந்தனர்.
ஆனால், இயக்குனரிடம் சென்ற எம்.ஜி.ஆர் நீங்கள் படப்பிடிப்புக்கு ஏற்பாடு செய்யுங்கள். நான் ராதா அண்ணனை சம்மதிக்க வைத்து இந்த சண்டை காட்சியை எடுக்கிறேன் என சொன்னார். எம்.ஜி.ஆரே சொல்லிவிட்டதால் படப்பிடிப்பு துவங்கியது.
எம்.ஆர்.ராதாவிடம் இந்த சண்டை காட்சியை இப்படித்தான் எடுக்கப்போகிறேன் என சொல்லி அவருக்கும் புரிய வைத்தார். சண்டை காட்சியும் எடுக்கப்பட்டது. அதில் எம்.ஜி.ஆரும், எம்.ஆர்.ராதாவும் இணைந்து சண்டை போடுவது போல் ஒரு காட்சி கூட இருக்காது. எம்.ஜி.ஆர் ராதாவை ஒரு குத்து விடுவது போல் ஒரு ஷாட், அதற்கு ராதாவின் ரியாக்ஷன் ஒரு ஷாட், அதேபோல், எம்.ஆர்.ராதா அடிப்பது போல் ஒரு ஷாட், அதற்கு எம்.ஜி.ஆரின் ரியாக்ஷன் ஒரு ஷாட் என முழு சண்டையையும் எடுத்துவிட்டு எடிட்டிங்கில் அது அனைத்தையும் ஒன்றிணைந்து உண்மையிலேயே இருவரும் சண்டையிடுவது போல் அந்த காட்சியை அமைத்தார் எம்.ஜி.ஆர். இரண்டு நடிகர்கள் சண்டை போடாமலேயே சண்டை காட்சியை எடுத்த சாதனை எம்.ஜி.ஆரையே சேரும்.
திரைத்துறை சார்ந்த எம்.ஜி.ஆரின் தொழில் நுட்ப அறிவுக்கு இந்த சம்பவம் முக்கிய உதாரணமாக சொல்லலாம். எம்.ஆர்.ராதா ஒருமுறை பேட்டி கொடுத்த போது ‘நல்லவன் வாழ்வான் படத்தில் எம்.ஜி.ஆர் எடுத்த சண்டை காட்சியை பார்த்து அசந்து போனேன்’ என சொன்னது குறிப்பிடத்தக்கது.