சரோஜாதேவியை அதிமுகவில் சேர்க்க எம்.ஜி.ஆர் ஆசைப்பட்டாரா?.. நடந்தது இதுதான்!...
நாடக நடிகராக இருந்து பின்னாளில் சினிமா நடிகராக மாறியவர் எம்.ஜி.ஆர். வாழ்வில் பல அவமானங்களை சந்தித்து முன்னேறியவர். சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து பெரிய ஸ்டாராக மாறியவர். தான் நடிக்கும் படங்களில் தன்னை பற்றி தானே புகழ்ந்து பாடி பாடல் காட்சிகளை வைத்தவர். அதேபோல் ஏழைகளுக்கு உதவுவது போலவும், தவறை தட்டி கேட்பது போலவும்தான் இவரின் கதாபாத்திரம் அமைக்கப்பட்டிருக்கும்.
நிஜவாழ்விலும் எம்.ஜி.ஆர் தன்னால் முடிந்த உதவிகளை பலருக்கும் செய்தவர். அதனால்தான் அவரை வள்ளல் என மக்கள் அழைத்தனர். சினிமாவில் பெரும் புகழடைந்த எம்.ஜி.ஆருக்கு அரசியல் ஆர்வம் ஏற்பட்டு அண்ணா துவங்கிய திமுகவை ஆதரித்தார். தன்னை திமுகவிலும் இணைத்துக்கொண்டார். அண்ணாவின் மறைவுக்கு பின் கருணாநிதி தலைவராக ஆதரவு கொடுத்தார். ஆனால், கருணாநிதியுடன் மோதல் ஏற்பட்டு திமுகவிலிருந்து விலகி அதிமுக எனும் கட்சியை துவங்கினார். தனக்கு நெருக்கமான பலரையும் அந்த கட்சியில் இணைத்தார். அதில் ஜெயலலிதாவும் ஒருவர். நடித்தது போதும் என ஜெயலலிதா முடிவெடுத்த சமயத்தில் அவரை அதிமுகவின் கொள்கைபரப்பு செயலாளராக நியமித்தார்.
அதேபோல், எம்.ஜி.ஆருடன் பல படங்களில் நடித்தவர் சரோஜா தேவி. ஒரு கட்டத்தில் கர்நாடகாவை சேர்ந்த ஒருவரை திருமணமும் செய்து கொண்டார். அவரின் கணவர் மரணமடையவே எம்.ஜி.ஆர் தனது மனைவி ஜானகியுடன் பெங்களூர் சென்று அவருக்கு ஆறுதல் சொன்னார்.
விரக்தி நிலையில் இருந்த சரோஜாதேவியிடம் ‘உன் கணவரின் மரணம் உனக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்புதான். ஆனால், அதற்காக நீ அதையே நினைத்துகொண்டிருந்தால் உன் உடலும், மனதும் பாதிக்கும். இந்த சமயத்தில் நீ பொதுவாழ்வில் உன்னை ஈடுபடுத்திக்கொண்டால் உனக்கு பிடிப்பாக இருக்கும். உனக்குத்தான் இந்திரா காந்தியை மிகவும் பிடிக்குமே! ராஜிவ்காந்தியிடம் பேசி நான் உன்னை காங்கிரஸில் நல்ல பதவியில் சேர்த்துவிடுகிறேன்’ என கூறியுள்ளார். ஆனால், அப்போது சரோஜாதேவி எந்த பதிலும் சொல்லவில்லை. பின்னாளில் அவர் அரசியலிலும் இணையவும் இல்லை.
இதைத்தான் சிலர் எம்.ஜி.ஆர் சரோஜாதேவியை அதிமுகவில் சேர்க்க முயற்சி செய்தார் என கதைகட்டிவிட்டனர். இந்த தகவலை சரோஜாதேவியே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.