எம்.ஜி.ஆர் தெரியும்... அவருக்கு அண்ணன் யார் தெரியுமா? அவரும் ஒரு நடிகர் தானாம்...
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் என்றாலே தமிழ் சினிமாவின் ஆணித்தரமான ஒரு அடையாளம் இன்றும் இருக்கிறது. அவரினை தெரிந்த பலருக்கு அவர் அண்ணனும் நடிகர் என்ற தகவல் தெரியாது. அவரும் பல வருடங்களாக சினிமாவில் இருந்தாலும் எம்ஜிஆரின் புகழினை அவரால் அடைய முடியாமல் போனதே உண்மை.
சதிலீலாவதி என்னும் திரைப்படத்தில் மூலம் 1936ல் சினிமாவுக்கு வந்தவர் எம்.ஜி.ஆர். ஆனால் அவரை சினிமாவில் நடிகராக நிலை நிறுத்த 11 வருடங்கள் எடுத்து கொண்டது. ராஜகுமாரி படத்தின் மூலம் தான் நடிகராக பெரிய அந்தஸ்த்தினை பெற்றார். தொடர்ந்து பல வருடங்கள் தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத தலைவராக இருந்தவர். இத்தனை புகழுக்கு சொந்தக்காரரான இவருக்கு ஒரு அண்ணன் இருக்கிறார்.
எம்.ஜி.சக்ரபாணி தான் அவர். எம்.ஜி.ஆரின் முதல் படமான சதிலீலாவதியில் சக்ரபாணியை நடிக்க வைக்க அப்படத்தின் இயக்குனர் எல்லிஸ் ஆர்.டங்கன் விரும்பினார். இருந்தாலும் அவருக்கான சரியான கதாபாத்திரம் கிடைக்கவில்லை. அதன் பின்னர் அவர் இயக்கத்தில் வெளியான இரு சகோதரர்கள் படத்தில் சக்ரபாணியினை அறிமுகப்படுத்தினார்.
தொடர்ச்சியாக அவருக்கு பட வாய்ப்புகள் வந்தது. சில படங்கள் நடித்தவர் நான்கு படங்களில் வில்லனாகவும் நடித்து இருந்தார். 1972ம் ஆண்டு வெளியான இதய வீணை படத்தில் எம்.ஜி.ஆரின் தந்தையாக நடித்திருந்தார். அதுவே இவரின் கடைசி திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.