எம்.ஜி.ஆர் நடித்த கடைசி கருப்பு வெள்ளை படம் என்ன தெரியுமா? சுவாரஸ்ய பின்னணி
தி.மு.க-வில் பொருளாளராக இருந்த எம்.ஜி.ஆர் 1972-ம் ஆண்டு, அக்கட்சியில் இருந்து வெளியேறி அ.தி.மு.க என்கிற தனிக்கட்சியைத் தொடங்கினார். இந்தக் கட்சி தான் சந்தித்த முதல் தேர்தலிலேயே ஆட்சியைப் பிடித்தது. அப்போது, தமிழின் முன்னணி நடிகராகவும் எம்.ஜி.ஆர் படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த சமயம். அப்படியான சமயத்தில் மலையாள இயக்குநர் எம்.கிருஷ்ணன் நாயர் இயக்கத்தில் இவர் நடித்த ரிக்ஷாக்காரன் படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. அதேபோல், சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் எம்.ஜி.ஆருக்குப் பெற்றுக் கொடுத்தது.
இதற்கு அடுத்த ஆண்டு, அதாவது 1972-ல் எம்.ஜி.ஆரை வைத்து நான் ஏன் பிறந்தேன், அன்னமிட்ட கை என இரண்டு படங்களை எடுத்தார். இந்த இரண்டு படங்களும் ரிக்ஷாக்காரன் அளவுக்குப் பெரிய வெற்றிப் படங்களாக அமையவில்லை. அன்னமிட்ட கை படத்தில் எம்.ஜி.ஆரும் நம்பியாரும் மாற்றாந்தாய் சகோதரர்களாக நடித்திருப்பார்கள். பெரும்பாலான படங்களில் எம்.ஜி.ஆருக்கு வில்லனாக நடித்த எம்.என்.நம்பியார் அவருடைய சகோதரராக நடித்திருப்பார்.
இதையும் படிங்க: ராமாபுரம் தோட்டத்தில் நடந்த திக்..திக்..சம்பவம்!.. நிலைகுலையாக இருந்த எம்.ஜி.ஆர்!.
கன்னட நடிகர் விஷ்ணுவர்த்தனின் மனைவி பாரதி, இந்தப் படத்தில் மருத்துவராக நடித்திருப்பார். ரிக்ஷாக்காரன் படத்தில் ஒரு சில காரணங்களால் கைகூடாமல் போன எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா ஜோடி, இந்தப் படத்தில் இணைந்து நடித்திருப்பார்கள். ஜெயலலிதா ரசிகர்களின் ஆதர்ஸமான படம் என்றும் இதைச் சொல்லலாம்.
அன்னமிட்ட கை படத்துக்கு இன்னும் சில சிறப்புகளும் இருக்கின்றன. தி.மு.க உறுப்பினராக எம்.ஜி.ஆர் நடித்த கடைசிப் படம். படம் வெளியாகி ஒரு மாதத்திலேயே அவர் அ.தி.மு.க என்கிற புதிய கட்சியைத் தொடங்கினார். அதேபோல், எம்.ஜி.ஆர் நடித்த கடைசி கருப்பு-வெள்ளைப் படம் என்கிற பெருமையும் அன்னமிட்ட கை படத்துக்கு உண்டு. கே.வி.மகாதேவன் இசையமைத்த இந்தப் படத்தில் நாகேஷ், மனோரமா என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கும். படம் 1972ம் ஆண்டு செப்டம்பர் 15-ம் தேதி வெளியானது.