சேஸிங்; மிரட்டல்; பூட்டப்பட்ட சர்ச் - எம்.ஜி.ஆர் நடத்திவைத்த அசோகன் திருமணத்தில் என்ன நடந்தது?
டயலாக் டெலிவரியில் புதுமை செய்தவர் நடிகர் அசோகன். வில்லன் கேரக்டர்களாகட்டும், காமெடியான குணச்சித்திர வேடங்களாகட்டும் தனது பாணியில் வெளுத்து வாங்கியவர். திருச்சியில் இருந்து சென்னை வந்து தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகராக உயர்ந்த அசோகனின் திருமணம் பரபரப்புக்குப் பஞ்சம் இல்லாமல் நடந்தது.
திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் படிக்கும்போதே பட்டிமன்றங்களிலும் மேடைப்பேச்சுகளிலும் கலக்கிக் கொண்டிருந்த அசோகனின் இயற்பெயர் அந்தோணி. மணப்பந்தல் படத்துக்காக அவரது பெயரை கே.ஏ.அசோகன் என மாற்றினார் இயக்குநர் டி.ஆர்.ராமண்ணா. அதன்பிறகு எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் என முன்னணி நடிகர்களோடு வில்லன், குணச்சித்திர பாத்திரங்களில் நடித்து புகழ்பெற்றார்.
எம்.ஜி.ஆரோடு 80 படங்களுக்கும் மேல் நடித்த அவர், நேற்று இன்று நாளை என எம்.ஜி.ஆர் படத்தைத் தயாரித்து ஒரு தயாரிப்பாளராகவும் வெற்றிகண்டார். எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெய்சங்கர் மற்றும் ஏ.வி.எம் சரவணன் ஆகியோர் அசோகனின் நெருங்கிய நட்பு வட்டத்தில் இருந்தவர்கள். கிறிஸ்தவரான அசோகன் - பிராமண வகுப்பைச் சேர்ந்த சரஸ்வதியைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். அவரது திருமணம் சில, பல ட்விஸ்டுகளுக்கு இடையே நடந்தது.
இதையும் படிங்க: அசோகன் செய்த வேலை…பாடம் புகட்டிய எம்.ஜி.ஆர்…சுவாரஸ்ய பின்னணி…
கோவையைச் சேர்ந்த சரஸ்வதியை அசோகன் உயிருக்கு உயிராகக் காதலித்தார். இதை, பெண் வீட்டாரிடம் சொன்னபோது கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்கள். இனிமேல் எங்கள் பெண்ணை நீங்கள் சந்திக்கக் கூடாது; மீறி சந்தித்தால் போலீஸில் புகார் கொடுப்போம் என்றெல்லாம் அவர் மிரட்டப்பட்டார். ஒரு கட்டத்தில் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொள்ளலாம் என இருவரும் முடிவெடுத்திருக்கிறார்கள். அப்படி வீட்டை விட்டு வெளியேறிய சரஸ்வதியை அசோகன் சென்னை அழைத்து வந்திருக்கிறார். இதுபற்றி எம்.ஜி.ஆருக்கும் அசோகன் தகவல் சொல்லியிருக்கிறார்.
அசோகனைப் பாராட்டிய எம்.ஜி.ஆர் உடனடியாகத் திருமண ஏற்பாடுகளைச் செய்தார். நுங்கம்பாக்கம் பாத்திமா சர்ச்சில் எம்.ஜி.ஆர், ஏ.வி.எம் சகோதரர்கள், இயக்குநர் ஏ.சி.திரிலோகச்சந்தர் என நெருங்கிய நண்பர்கள் குழுமினர். சர்ச்சின் அனைத்து கதவுகளும் மூடப்பட்டன. சரஸ்வதிக்கு மேரி ஞானம் என நாமகரணம் சூட்டப்பட்டு அவர்களது திருமணம் சிறப்பாக நடந்தது. வெளியூர் ஷூட்டிங்கில் இருந்து ஜெய்சங்கர் திரும்பி வந்ததும், நண்பன் அசோகனுக்கு பிரமாதமான விருந்து கொடுத்தார். பிரபலங்கள் கூடி நடத்தி வைத்த திருமணம் என்பதால், சரஸ்வதி குடும்பத்தினர் போலீஸில் புகார் கொடுக்க வேண்டிய வேலை ஏற்படவில்லை.