படப்பிடிப்புக்குள் நுழைந்த எம்.ஜி.ஆருக்கு மரியாதை தராத வில்லன் நடிகர்… அவர் சொன்ன பதில்தான் ஹைலைட்!..
எம்.ஜி.ஆர் படங்களில் அவருக்கு நிகரான வில்லனாக திகழ்ந்தவர் நம்பியார்தான். ஆனால் நிஜ வாழ்வில் இருவரும் மிக நெருங்கிய நண்பர்களாக திகழ்ந்தார்கள். இந்த நட்பு எம்.ஜி.ஆர் முதன்முதலில் கதாநாயகனாக நடித்த “ராஜகுமாரி” திரைப்படத்திலேயே தொடங்கிவிட்டது. ஆம்!
அத்திரைப்படத்திலேயே இருவருக்குள்ளும் நட்பு ஏற்பட்டது. அதன்பின் பல திரைப்படங்களில் எம்.ஜி.ஆருக்கு வில்லனாக நம்பியார் நடித்தாலும், அவர்கள் இருவருக்குள்ளான நட்பு தொடர்ந்துகொண்டேதான் இருந்தது. குறிப்பாக நம்பியாருக்கு திருமணம் ஆனபோது, மாப்பிள்ளைத் தோழனாக எம்.ஜி.ஆர்தான் இருந்தாராம். அந்த அளவுக்கு மிக நெருங்கிய நண்பர்களாக இருந்திருக்கிறார்கள்.
எம்.ஜி.ஆர் மிகப் பெரிய நடிகரான பிறகு அவருக்கென்று ஒரு தனி மரியாதை இருந்தது. அவரை பார்த்தாலே அவரது காலில் விழ பலரும் காத்திருந்தனர். அதே போல் அவர் படப்பிடிப்புத் தளத்திற்குள் நுழைந்தாலே அங்குள்ளவர்கள் அனைவரும் எழுந்து நிற்பார்கள்.
இந்த நிலையில் ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது எம்.ஜி.ஆர் உள்ளே நுழைந்திருக்கிறார். அப்போது அனைவரும் எழுந்து நிற்க நம்பியார் மட்டும் எழுந்து நிற்கவில்லையாம். அப்போது எம்.ஜி.ஆரின் காதுபட இயக்குனர் பா.நீலகண்டன் நம்பியாரிடம் “சின்னவர் வருகிறார், இப்படி எழுந்து நிற்காமல் இருக்கிறீர்களே” என கேட்டிருக்கிறார். அதற்கு நம்பியார், “நான் ஏன் எழுந்து நிற்க வேண்டும். அவரும் ஒரு நடிகர், நானும் ஒரு நடிகன். அவ்வளவுதானே” என கூறியிருக்கிறார். இதனை கேட்ட எம்.ஜி.ஆர் சிரித்துக்கொண்டே சென்றுவிட்டாராம். அப்படிப்பட்ட புரிதல் இவர்கள் இருவருக்குள்ளும் இருந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 12 நாட்களில் எடுக்கப்பட்ட படம்… ரிலீஸ் ஆனதும் நொந்துப்போன எஸ்.ஏ.சி… ஏன் தெரியுமா?