“மூக்குத்தி அம்மன்” படத்துக்கு முதலில் வைக்கப்பட்ட பெயர்… அட இது பைக் விளம்பரமாச்சே!!
ரேடியோ உலகில் மிகப்பிரபலமான விஜேவாக திகழ்ந்தவர் ஆர் ஜே பாலாஜி. இவர் தொகுத்து வழங்கிய “கிராஸ் டாக்” என்ற நிகழ்ச்சி இப்போதும் மிகப் பிரபலமாக பேசப்படுவது உண்டு.
அதுமட்டுமல்லாது, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் கிரிக்கெட் வர்ணனையாளராகவும் திகழ்ந்து வருகிறார். இவரது நகைச்சுவையான பேச்சுக்கும் தனித்துவமான குரலுக்கும் பல ரசிகர்கள் உண்டு.
இதனை தொடர்ந்து சுந்தர்.சி இயக்கிய “தீயா வேல செய்யனும் குமாரு” திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து “வடகறி”, “நானும் ரவுடிதான்”, “காற்று வெளியிடை” போன்ற பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.
மேலும் “எல் கே ஜி”, “மூக்குத்தி அம்மன்”, “வீட்ல விசேஷம்” போன்ற திரைப்படங்களை இயக்கி அதில் ஹீரோவாகவும் நடித்தார். இதில் “எல்.கே.ஜி.”, “மூக்குத்தி அம்மன்” போன்ற திரைப்படங்கள் மாபெரும் வெற்றியை பெற்றது. தற்போது “சிங்கப்பூர் சலூன்” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட ஆர் ஜே பாலாஜி, “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் குறித்த ஒரு சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துகொண்டார்.
அதாவது “மூக்குத்தி அம்மன்” திரைப்படத்திற்கு முதலில் “ஹூடிபாபா” என்ற டைட்டிலைத்தான் ஆர் ஜே பாலாஜி வைத்தாராம். ஒரு நாள் அவரது அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்மணியிடம் “ஹூடிபாபா” என்று படத்திற்கு பெயர் வைத்தால் படம் பார்ப்பீர்களா?” என கேட்டாராம். அதற்கு அவர் “அப்படின்னா?” என கேட்டாராம்.
உடனே பாலாஜி “மூக்குத்தி அம்மன்” என டைட்டில் வைத்தால் பார்ப்பீர்களா? என்றாராம். அதற்கு அந்த பெண்மணி “சாமி படம்தானே, நிச்சயம் பார்ப்பேன்” என்றாராம்.
இதையும் படிங்க: “ரஜினியை அடிக்க நான் ரெடி…” தயங்கிய நடிகர்களிடையே ஆவலோடு கை தூக்கிய நாசர்…
அதன் பின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷிடம் “சார், ஹூடிபாபா என்றால் கொஞ்சம் பேருக்குத்தான் தெரியும். ஆதலால் மூக்குத்தி அம்மன் என்று பெயர் வைத்துவிடுவோம்” என்றாராம். அவரும் சரி என்று ஒப்புக்கொண்டாராம். அதன் பிறகுதான் இத்திரைப்படத்திற்கு “மூக்குத்தி அம்மன்” என்ற டைட்டிலை வைத்தார்களாம்.
“ஹூடிபாபா” என்ற வார்த்தை, ஒரு பிரபல பைக் நிறுவனமான பஜாஜ் வாகனத்தின் விளம்பரத்தில் வரும் பாடல் ஆகும். இந்த விளம்பரம் வெளிவந்த சமயத்தில் “ஹூடிபாபா” என்ற வார்த்தை மிகவும் பிரபலமான ஒன்றாக இருந்தது.