பொங்கல் ஹிட் விஷாலுக்குதான்!.. மத கஜ ராஜா படம் பற்றி ரசிகர்கள் சொல்வது என்ன?....
Madhagaja Raja: சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், சந்தானம், வரலட்சுமி, அஞ்சலி, மனோபாலா உள்ளிட்ட பலரும் நடித்து 12 வருடங்களுக்கு முன்பே உருவான திரைப்படம் மதகஜராஜா. இந்த படத்தை ஜெமினி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்திருந்தார். இந்த படத்தில் வில்லனாக நடிகர் சோனூ சூட் நடித்திருக்கிறார். ஆனால், சில காரணங்களால் இப்படம் வெளியாகவில்லை.
இந்நிலையில், இந்த திரைப்படம் பொங்கலை முன்னிட்டு இன்று வெளியாகியுள்ளது. நேற்று இரவே சென்னை சத்யம் தியேட்டரில் ஒரு காட்சி திரையிடப்பட்டது. அதேபோல், வெளிநாடுகளிலும் இப்படம் வெளியாகியுள்ளது. இந்த படத்தை பார்த்த பலரும் படம் எப்படி இருக்கிறது என எக்ஸ் தளம் உள்ளிட்ட சமூகவலைத்தள பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.
படம் கலகலப்பாக இருப்பதாகவும் கண்டிப்பாக பொங்கல் வெற்றி விஷாலுக்குதான் என்றும் பலரும் பதிவிட்டு வருகிறார்கள். படம் முழுக்க காமெடி சிரிக்க வைப்பதாகவும், குறிப்பாக சந்தானம் - மனோபாலா இடையே வரும் 20 நிமிட காமெடி காட்சி தியேட்டரில் ஒரே சிரிப்பு சப்தம் எனவும் பலரும் சொல்லி வருகிறார்கள்.
இது போன்ற காமெடி படத்தை கொடுத்ததற்கு சுந்தர் சி-க்கு நன்றி. விஷால் - சந்தானம் கூட்டணியும் சிறப்பாக இருப்பதோடு, பல காட்சிகளில் இருவரும் சிரிக்க வைக்கிறார்கள், மனோபாலா காமெடி முரட்டு ஃபன் எனவும் ஒருவர் பதிவிட்டிருக்கிறார். இப்படி தியேட்டரில் வாய் விட்டு சிரித்து பல வருடங்கள் ஆகிவிட்டது. படத்தில் சில குறைகள் இருந்தாலும் காமெடி காட்சிகள் ரசிக்கும்படி இருக்கிறது என ஒருவர் கூறியிருக்கிறார்.
மதகஜராஜா கண்டிப்பாக பொங்கல் விருந்துதான். படம் முழுக்க வரும் காமெடி உங்களை சிரிக்க வைக்கும். காமெடி நடிகர் சந்தானத்தை மிஸ் பண்ணுகிறோம்’ என ஒருவர் பதிவிட்டுள்ளார். ரசிகர்கள் சொல்வதை பார்க்கும்போது கண்டிப்பாக பொங்கலுக்கு வந்த படங்கள் மதகஜராஜா திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெறும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.