எம்.ஆர்.ராதா எம்.ஜி.ஆரை சுட்டதுதான் தெரியும்!.. பாராட்டியது தெரியுமா?.. அதுவும் செமயா?...
50,60 களில் முன்னணி நடிகர்களாக இருந்த எம்.ஜி,ஆர், சிவாஜி, எம்.ஆர்.ராதா, என்.எஸ்.கிருஷ்ணன், நாகேஷ், விகே ராமசாமி உள்ளிட்ட பல நடிகர்களும் நாடகங்களில் இருந்து வந்தவர்கள்தான். ஆனால், வெவ்வேறு நாடக கம்பெனிகளில் பல வருடங்கள் நடித்துவிட்டு சினிமாவுக்கு வந்தவர்கள்.
எம்.ஜி.ஆர் சிவாஜி காலத்தில் பல படங்களில் வில்லனாகவும், காமெடி நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தவர் எம்.ஆர்.ராதா. தலையை ஆட்டி ஆட்டி அவர் பேசும் ஸ்டைலும், கரகர குரலும், அவரின் மேனரீசமும், உடல் மொழியும் எந்த நடிகரிடமும் இருக்காது. அவர் நடிப்பில் வெளியான ரத்தக்கண்ணீர் திரைப்படம் இப்போதும் வரை பேசப்படுகிறது எனில் அதற்கு காரணம் எம்.ஆர்.ராதாவின் நடிப்பு மட்டுமே.
எம்.ஜி.ஆரின் பல படங்களில் இவர் நடித்துள்ளார். நாடகத்துறையிலும், வயதிலும் எம்.ஜி.ஆரை விட வயதில் பெரியவர். எம்.ஜி.ஆரை இவரை எப்போதும் ‘அண்ணே’ என பாசமாக அழைப்பார். அதேபோல், எம்.ஆர்.ராதாவும் எம்.ஜி.ஆருடன் அன்பாக பழகுவார். அதேநேரம், சினிமாவில் மட்டுமல்ல நிஜ வாழ்விலும் எம்.ஜி.ஆருக்கு வில்லனாக இருந்தவர் இவர். ஒரு பிரச்சனையில் வாக்குவாதம் முற்றி எம்.ஜி.ஆரை துப்பாக்கியால் சுட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். அதன் காரணமாக எம்.ஜி.ஆரின் குரலே மாறிப்போனது. சில வருடங்கள் எம்.ஆர்.ராதா சிறையில் இருந்தார்.
எம்.ஆர்.ராதா என்றாலே அவர் எம்.ஜி.ஆரை துப்பாக்கியால் சுட்டதுதான் பலருக்கும் நினைக்கு வரும். ஆனால், ஒரு பேட்டியில் அவர் எம்.ஜி.ஆரை பற்றி மிகவும் புகழ்ந்து பேசியது பலருக்கும் தெரியாது. 1966ம் வருடம் அவர் கொடுத்த பேட்டி ஒன்றில் ‘படப்பிடிப்பில் மற்றவர்களையும் உற்சாகப்படுத்தில் நான் வேலை வாங்குவேன். எம்.ஜி.ஆரிடமும் இந்த பழக்கம் இருப்பதை பார்த்தேன்.
இந்த ஒரு காரியத்திலேயே அவரை எனக்கு பிடித்துவிட்டது. நல்லவன் வாழ்வான் படத்தில் சண்டை காட்சிகளில் அவரின் வேகத்தை பார்த்து அசந்து போனேன். எம்.ஜி.ஆர் நடிப்பில் தனக்கென ஒரு பாணியை வைத்திருக்கிறார். சில நடிகர்களை போல ஹாலிவுட் மற்றும் ஹிந்தி நடிகர்களின் நடிப்பை அவர் காப்பி அடிப்பதில்லை. எனவே. எம்.ஜி.ஆர் ஒரு ஒரிஜினல் நடிகர்’ என பாராட்டி பேசியுள்ளார்.