அந்த நடிகையை விட அதிக சம்பளம் வேணும்!.. எம்.ஆர்.ராதா போட்ட கண்டிஷன்!...
திரையுலகில் எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்தில் அவர்களுக்கு இணையாக பேசப்பட்ட ஒரு நடிகர் எம்.ஆர்.ராதா. நக்கலும், தலையை ஆட்டி ஆட்டி அவர் பேசும் ஸ்டைலும், அவரின் கரகர குரலும், பகுத்தறிவு வசனங்களும் ரசிகர்களை கவர்ந்தது.
எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜியின் பல திரைப்படங்களில் இவர் வில்லனாக நடித்துள்ளார். காமெடி வேடம் என்றாலும் சரி, குடும்பத்தை கெடுக்கும் வில்லன் வேடம் என்றாலும் சரி அசத்தலாக செய்துவிடுவார் எம்.ஆர்.ராதா. அதனால், இவருடன் நடிக்கும் போது எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகியோர் கூட ஜாக்கிரதையாக நடிப்பார்கள்.
நடிகர் எம்.ஜி.ஆருக்கும் இவருக்கும் ஒருமுறை கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரை துப்பாக்கியால் சுட்டு சர்ச்சையில் சிக்கினார். இதற்காக சில வருடங்கள் சிறையிலும் இருந்தார். இவரின் மகன் ராதாரவி, மகள் ராதிகா ஆகியோரும் சினிமா துறையில் புகுந்து இப்போதுவரை கலக்கி வருகின்றனர்.
அவருக்கு நடிகவேள் என்கிற பட்டமும் கொடுக்கப்பட்டது. பக்தி நிறைந்த ஆன்மிக திரைப்படங்கள் வந்த காலத்திலேயே ரத்தக்கண்ணீர் என்கிற படத்தில் அவ்வளவு நாத்திக வசனங்களை பேசி ரசிகர்களிடம் கைத்தட்டலை வாங்கினார் எம்.ஆர்.ராதா. அவர் எவ்வளவோ படங்களில் நடித்திருந்தாலும் எம்.ஆர்.ராதா என்றதும் ரசிகர்களுக்கு நினைவுக்கு வருவது ரத்தக்கண்ணீர் திரைப்படம்தான்.
ஆனால், இந்த படத்தில் கூட சில கண்டிஷன்களை போட்டுத்தான் எம்.ஆர்.ராதா நடித்தார். நான் நாடகங்களில் நடித்துவிட்டு மற்ற நேரத்தில்தான் படப்பிடிப்பில் கலந்து கொள்வேன் என கண்டிஷன் போட்டார். அது ஏற்கப்பட்டது.
அப்போது ஒளவையார் படத்தில் நடித்த கே.பி.சுந்தராம்பாளுக்கு ஒரு லட்சம் சம்பளமாக கொடுக்கப்பட்டது. தனக்கு அதை விட 25 ஆயிரம் அதிகமாக கொடுக்க வேண்டும் என கண்டிஷன் போட்டாராம். அதையும் தயாரிப்பாளர் ஏற்றுக்கொண்டார். இப்படித்தான் ரத்தக்கண்ணீர் உருவாகி வெற்றி பெற்று வசூலை வாரிக்குவித்தது.
இதையும் படிங்க: ஆளப்போறாரு STR!.. வித்தியாசமான கொள்கையை கையில் எடுக்கும் சிம்பு.. தயாரிப்பாளர்கள் ஹேப்பி அண்ணாச்சி..