எம்.ஜி.ஆருக்கு முன்பே ஒரு நடிகரை சுட துப்பாக்கி வாங்கிய எம்.ஆர்.ராதா!… ஆனா ஜஸ்ட் மிஸ்!….
நாடக நடிகராக இருந்து சினிமாவில் நுழைந்து வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகராக கலக்கியவர் எம்.ஆர்.ராதா. கரப்பான குரலில் ரசிகர்களை ரசிக்க வைத்தவர். இவர் நடித்த ரத்தக்கண்ணீர் திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. எம்.ஜி.ஆர், சிவாஜி உள்ளிட்ட பலரின் படங்களிலும் இவர் வில்லனாகவும், காமெடி நடிகராகவும் நடித்துள்ளார். எம்.ஆர்.ஆர் ராதா கோபக்காரார். அவரை அவமரியாதை செய்வது போல் நடந்துகொண்டால் மிகவும் கோபமாக நடந்து கொள்வார். அவர் எந்த அளவுக்கு கோபக்காரர் என்பதற்கு அவர் எம்.ஜி.ஆரை துப்பாக்கியால் சுட்ட சம்பவமே சாட்சி.
ஆனால், அவர் எம்.ஜி.ஆரை சுடுவதற்கு முன்பே ஒரு பிரபல நடிகரை சுடுவதற்கு துப்பாக்கி வாங்கினார் என்றால் நம்ப முடிகிறதா?.. உண்மையில் அப்படி ஒரு சம்பவம் நடந்தது. எம்.ஆர்.ராதாவின் சிறப்பான நடிப்பில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற நாடகம் ‘இழந்த காதல்’. இந்த கதையை சினிமாவாக எடுக்க நினைத்த கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் ஒரு புது நடிகரை ஹீரோவாக போட்டு அப்படத்தை அவரே இயக்கினார். ‘தான் நடித்த நாடகத்தின் கதையில் தன்னை ஹீரோவாக போடாமல் வேறு ஒருவரை வைத்து எடுப்பதா?’ என கோபமடைந்த எம்.ஆர.ராதா ஆவேசத்தில் என்.எஸ்.கிருஷ்ணனை சுடுவதற்கு என ஒரு துப்பாக்கியை வாங்கியுள்ளார்.
எம்.ஆர்.ராதாவுக்கும், என்.எஸ்.கிருஷ்ணனுக்கும் பொதுவான நண்பராக இருந்த யதார்த்தம் பொன்னுசாமி என்பவருக்கு இந்த விஷயம் தெரியவர, அவர் இதை என்.எஸ்.கிருஷ்ணனிடம் சொல்லிவிட்டார். இதையடுத்து எம்.ஆர்.ராதா நடிக்கும் நாடக கொட்டகைக்கு நேராக சென்ற என்.எஸ்.கிருஷ்ணன் எம்.ஆர்.ராதாவிடம் ‘ஏண்டா உனக்கு அறிவே இல்லையா?.. யோசிக்கவே மாட்டியா?… என் படத்தில் நீ நடித்தால் உன்னை ‘இப்படி நடி.. அப்படி நடி’ என நான் சொல்லி தரவேண்டி இருக்கும். நீ எவ்வளவு பெரிய நடிகன். உனக்கு நடிப்பு சொல்லி கொடுக்க எனக்கு தகுதி இருக்கா?.. அதனாலதான் உன்னை ஹீரோவாக போடவில்லை’ என கோபமாக சொல்ல, நெகிழ்ந்து போன எம்.ஆர்.ராதா என்.எஸ்.கிருஷ்ணனை கட்டி அணைத்து கொண்டாராம்.