எம்.ஜி.ஆரை தப்பா புரிஞ்சிக்கிட்டேன்!.. தவறை உணர்ந்து கண்கலங்கிய எம்.ஆர்.ராதா...
1967ம் வருடம் ஜனவரி மாதம் திரையுலகில் மட்டுமல்ல. தமிழ்நாட்டுக்கே அதிர்ச்சியை கொடுத்த செய்தி எம்.ஜி.ஆரை எம்.ஆர்.ராதா துப்பாக்கியால் சுட்டதுதான். ‘பெற்றால்தால் பிள்ளையா’ படத்தின் தயாரிப்பாளருக்கு எம்.ஆர்.ராதா ஒரு லட்சம் கடனாக கொடுத்திருந்தார்.
ஆனால், படம் வெளியாகியும் அப்பணத்தை தயாரிப்பாளரால் எம்.ஆர்.ராதாவுக்கு கொடுக்க முடியவில்லை. இது தொடர்பான பஞ்சாயத்து எம்.ஜி.ஆரிடம் சென்றபோதுதான் எம்.ஆர்.ராதாவுக்கும், எம்.ஜி.ஆருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு எம்.ஆர்.ராதா எம்.ஜி.ஆரின் கழுத்தில் சுட்டுவிட்டார். இதனால் எம்.ஜி.ஆரின் குரலும் பாதிக்கப்பட்டது.
நாடகங்களில் இருவரும் நடித்துக்கொண்டிருந்த போதே எம்.ஆர்.ராதாவுடன் பாசமாக பழகியவர் எம்.ஜி.ஆர். அவரை எப்போதும் அண்ணன் என அழைப்பார். எம்.ஆர்.ரதாவும் எம்.ஜி.ஆரை ‘ராமச்சந்திரா’ என பாசமாக அழைப்பார். ஆனால், அந்த துப்பாக்கி சூடு சம்பவம் இருவரையும் பிரித்துவிட்டது. அதன்பின் எம்.ஆர்.ராதாவிடம் பேசுவதையே எம்.ஜி.ஆர் தவிர்த்துவிட்டார். அதேநேரம், பின்னாளில் எம்.ஆர்.ராதா தனது தவறை புரிந்துகொண்டு வருத்தப்பட்டும் இருக்கிறார்.
எம்.ஜி.ஆர், சிவாஜியை வைத்து பல வெற்றிப்படங்களை இயக்கியவர் கே.சங்கர். இவர் எம்.ஜி.ஆரின் உறவினரும் கூட. ஒருமுறை அவர் எம்.ஜி.ஆரை சந்தித்த போது ‘வேலும் மயிலும் துணை’ என்ற படத்தில் எம்.ஆர்.ராதாவின் நடிப்பை பாராட்டி எம்.ஜி.ஆர் பேசியிருக்கிறார்.
அதன்பின் சில நாட்கள் கழித்து எம்.ஆர்.ராதாவை சங்கர் சந்தித்த போது எம்.ஜி.ஆர் பாராட்டியதை பற்றி அவரிடம் சொல்ல கண்கலங்கிய எம்.ஆர்.ராதா ‘நான்தான் ராமச்சந்திரனை தவறாக புரிந்துகொண்டேன். அது என் போதாத காலம்’ என மிகவும் வருத்தப்பட்டு பேசினாராம். மேலும், சங்கரிடம் ‘நான் ராமச்சந்திரனை தனிப்பட்ட முறையில் சந்திக்க வேண்டும். இதை அவரிடம் சொல்’ எனவும் கூறியிருக்கிறார். ஆனால், அந்த சந்திப்பு கடைசி வரை நடக்கவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.