செண்டிமெண்ட்ட கிண்டலடிச்சவரா இப்படி?!.. இறந்த மனைவி, மகனுக்காக எம்.ஆர்.ராதா என்ன செய்தார் தெரியுமா?…

Published on: May 6, 2023
mr radha
---Advertisement---

திரையுலகில் ஹீரோவாக, வில்லனாக, குணச்சித்திர நடிகராக, காமெடி நடிகனாக என எல்லா வேடத்தில் அசத்தியவர் நடிகர் எம்.ஆர்.ராதா. நாடகங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அதன் மூலம் சினிமாவில் நுழைந்தவர். யாருக்கும் பயப்படாதவர். அதேபோல், எவ்வளவு பெரிய பதவி மற்றும் பொறுப்பில் இருந்தாலும் சரி, தன்னை மட்டம் தட்டினால் பொங்கியெழுந்துவிடுவார். கரகரப்பான மற்றும் வித்தியாசமான குரல் மூலம் ரசிகர்களை ரசிக்க வைத்தவர். இப்பவும் இவரின் குரலை மிமிக்ரி கலைஞர்கள் பேசி ரசிகர்களிடம் கைத்தட்டல் வாங்கி வருகிறார்கள்.

எம்.ஆர்.ராதா தான் நடிக்கும் படங்களில் தமிழர்களின் வழக்கமான செண்டிமென்ட்களை கிண்டலடிப்பார். ரத்தக்கண்ணீர் படத்தில் கூட அப்படி பல காட்சிகள் இருக்கும். நாடகங்களிலும் அப்படி பல காட்சிகளை எம்.ஆர். ராதா வைப்பார். தங்களைத்தான் ராதா கிண்டலடிக்கிறார் என தெரிந்தும் ரசிகர்கள் அதை கைதட்டி ரசிப்பார்கள். ஏனெனில், எம்.ஆர்.ராதா அதை அவ்வளவு அழகாகவும், ரசிக்கும்படியும் சொல்லுவார்.

திரைப்படங்களிலும், நாடகங்களிலும் செண்டிமெண்ட்டை கிண்டலடித்து நடித்த எம்.ஆர்.ராதா தனது சொந்த வாழ்க்கையில் ஒன்றுக்காக செண்டிமெண்ட்டாக உருகினார் என்றால் நம்ப முடிகிறதா?.. ஆனால், உண்மையில் அப்படி ஒன்று ராதாவின் வாழ்வில் நடந்துள்ளது.

எம்.ஆர்.ராதா ரத்தக்கண்ணீர், லட்சுமி காந்தன் போன்ற நாடகங்களில் நடித்துக்கொண்டிருந்த காலம் அது. பெண்கள் நாடகங்களில் நடிக்க முன்வராத காலம் அது. அதனால்தான், அப்போது பல நாடகங்களில் ஆண்களே பெண்கள் வேடத்தில் நடிப்பார்கள். ஆனால், பிரேமாவதி என்கிற 17 வயது பெண் ராதாவுக்கு ஜோடியாக நடிக்க வந்தார். அவர் மீது காதல் கொண்ட ராதா அவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு பிறந்த குழந்தைக்கு தமிழரசன் என பெயர் வைத்தனர்.

சில வருடங்களில் அம்மைநோயால் பாதிக்கப்பட்டு எம்.ஆர்.ராதாவின் குழந்தை மரணமடைந்தது. அது நடந்து சில நாட்களில் பிரேமாவதியும் அம்மைநோயால் மரணமடைந்தார். தனது ஆசை குடும்பும் தன்னை விட்டு போனதை ராதாவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவர்கள் இருவரையும் புதைத்த இடத்தில் 40 அடியில் ஒரு ஸ்தூபியை கட்டி அவர்களுக்கு நினைவு சின்னம் அமைத்தார். கோவையிலிருந்து பாலக்காடு செல்லும் வழியில் ஆற்றுப்பாலத்தை கடந்து சென்றால் இருக்கும் இந்து மையானத்தில் இப்போதும் அந்த நினைவு சின்னத்தை பார்க்க முடியும்.

சினிமாவில் செண்டிமெண்ட்டுகளை கிண்டலடித்தாலும் அவருக்குள்ளும் இப்படி ஒரு செண்டிமெண்ட்!…

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.