எம்.ஆர்.ராதா மீது இருந்த வன்மம்! மூன்றாவது மாடியில் இருந்து குதிக்க சொன்ன இயக்குனர்
நடிகவேல் என்று புகழ்பெற்ற எம்.ஆர்.ராதா, தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகராக திகழ்ந்தவர். இவர் நடித்த “ரத்தக்கண்ணீர்” திரைப்படம் இப்போதும் மிக பிரபலமான திரைப்படமாக சினிமா ரசிகர்களால் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் எம்.ஆர்.ராதாவின் மீது வன்மம் கொண்ட ஒரு நபர் அவரை மூன்றாவது மாடியில் இருந்து குதிக்க சொல்லியிருக்கிறார். அதற்கு எம்.ஆர்.ராதா என்ன செய்தார் என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.
முதல் படம்
எம்.ஆர்.ராதா நாடகத் துறையில் மிகப் புகழ்பெற்ற நடிகராக திகழ்ந்தவர். அவர் நடித்த முதல் திரைப்படம் “ராஜசேகரன்”. இத்திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் எம்.ஆர்.ராதா நடித்திருந்தார். பிரகாஷ் என்பவர் அத்திரைப்படத்தை இயக்கியிருந்தார்.
இயக்குனர் பிரகாஷ் மது பழக்கம் உடையவராம். இரவில் மது அருந்துவிட்டு காலை படப்பிடிப்புக்கு வந்து சொக்கிய கண்களோடு உட்கார்ந்திருப்பாராம். ஒரு நாள் அத்திரைப்படத்தில் ஹீரோவாக நடித்துக்கொண்டிருந்தவர் ஒரு காட்சியில் சரியாக நடிக்கவில்லையாம். எம்.ஆர்.ராதா அந்த நடிகருக்கு நடிப்பு சொல்லிக்கொடுத்திருக்கிறார். இதனை பார்த்துக்கொண்டிருந்த இயக்குனர் எம்.ஆர்.ராதாவை அழைத்து, “இந்த படத்துக்கு நான் டைரக்டரா இல்ல நீ டைரக்டரா?” என்று கோபத்துடன் கேட்டாராம். மேலும் அந்த இயக்குனருக்கு எம்.ஆர்.ராதாவின் மீது வன்மம் பிறந்ததாம்.
சாகச காட்சி
எம்.ஆர்.ராதா மீது வன்மம் கொண்ட அந்த இயக்குனர் ஒரு காட்சியில் வேண்டுமென்றே எம்.ஆர்.ராதாவை மூன்றாவது மாடியில் இருந்து கீழே நின்றுகொண்டிருக்கும் குதிரையின் மீது குதித்து, அப்படியே அந்த குதிரையை ஓட்டி செல்லவேண்டும் என்று கூறினாராம். உடனே எம்.ஆர்.ராதாவும் ஒப்புக்கொண்டாராம்.
மூன்றாவது மாடிக்கு ஏறி அங்கிருந்து தயங்காமல் கீழே நின்றுகொண்டிருந்த குதிரையின் மீது சரியாக குதித்து அந்த குதிரையை ஓட்டி சென்றிருக்கிறார் எம்.ஆர்.ராதா. ஆனால் இயக்குனர் வேண்டும் என்றே ஒன் மோர் கேட்டாராம். கேமரா மேன் இயக்குனரிடம், “அந்த காட்சி மிக சிறப்பாக இருக்கிறது. ஒன்மோர் தேவையில்லை” என்று கூறியிருக்கிறார். ஆனாலும் இயக்குனர் ஒன்மோர் கேட்டிருக்கிறார்.
மருத்துவமனையில் எம்.ஆர்.ராதா
இந்த இயக்குனர் தன் மீது வன்மம் கொண்டுதான் இவ்வாறு நடந்துகொள்கிறார் என்றும் அந்த இயக்குனருக்கு நாம் பாடம் புகுத்த வேண்டும் என்றும் நினைத்த எம்.ஆர்.ராதா, மீண்டும் மூன்றாவது மாடியில் இருந்து குதிரையை நோக்கி குதித்தார். ஆனால் அந்த குதிரை சற்று விலகிவிட்டது. இதனால் எம்.ஆர்.ராதாவுக்கு பலத்த அடி. கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அதன் பின் மீண்டு வந்தாராம் எம்.ஆர்.ராதா. இப்படி உயிரையே பணயம் வைத்து நடித்தும் அத்திரைப்படம் ஓடவில்லை என்பதுதான் இதில் சோகம்.