எம்.ஆர்.ராதாவின் வாய் முகூர்த்தத்தால் அலங்கோலம் ஆன பக்தி படம்… பார்த்துதான் பேசனும்போல!!

MR Radha
தமிழின் பழம்பெரும் நடிகரான எம்.ஆர்.ராதா, திராவிட இயக்க கருத்துக்களில் மிகவும் ஈடுபாடு கொண்டவர் என்பதை நாம் அனைவரும் அறிவோம். கடவுள் மறுப்பு, நாத்திகம் போன்ற கருத்துக்களை தனது திரைப்படங்களின் மூலம் வெளிப்படுத்தி, மக்களிடையே ஒரு பகுத்தறிவு புயலையே கிளப்பியவர் எம்.ஆர்.ராதா.
குறிப்பாக எம்.ஆர்.ராதா நடித்த “இரத்த கண்ணீர்” திரைப்படத்தை நம்மால் மறக்கமுடியாது. அதில் எம்.ஆர்.ராதா பேசும் வசனங்கள் அனைத்தும் இப்போதும் மிகப் பிரபலமானவை.

MR Radha
இந்த நிலையில் எம்.ஆர்.ராதா 1979 ஆம் ஆண்டு “கந்தர் அலங்காரம்” என்ற திரைப்படத்தில் நடித்தார். இத்திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு பக்தி திரைப்படம். இதில் ஒரு சிறப்பம்சம் என்னவென்றால், இத்திரைப்படத்தில் அப்போது மிகவும் பிரபலமாக இருந்த ஆன்மீக சொற்பொழிவாளரான கிருபானந்த வாரியர், எம்.ஆர்.ராதாவுடன் இணைந்து நடித்தார்.

MR Radha
“கந்தர் அலங்காரம்” திரைப்படத்தை குன்னக்குடி வைத்தியநாதன் தயாரித்திருந்தார். இத்திரைப்படத்தை சுந்தரம் இயக்கியிருந்தார். இந்த நிலையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் ஒரு நாள் எம்.ஆர்.ராதா படக்குழுவினரிடம் “இந்த படத்துக்கு கந்தர் அலங்காரம் என்று மிகவும் அழகாக பெயர் வைத்திருக்கிறீர்கள். ஆதலால் மிகவும் கவனமாக எடுங்கள். கந்தர் அலங்காரம் கந்தர் ‘அலங்கோலம்’ ஆகிவிடப்போகிறது” என நகைச்சுவையாக கூறியிருக்கிறார்.

Kanthar Alangaram
ஆனால் எம்.ஆர்.ராதாவின் வாய் முகூர்த்தமோ என்னவோ, “கந்தர் அலங்காரம்” திரைப்படம் வெளியானபின் மிகப்பெரிய தோல்வியடைந்தது. எம்.ஆர்.ராதா தனது மனதில் பட்டதை மிகவும் வெளிப்படையாகவும் தைரியமாகவும் பேசுபவர் என்பதை நாம் அனைவரும் அறிவோம். எனினும் எம்.ஆர்.ராதா “கந்தர் அலங்காரம்” திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது இப்படி வெளிப்படையாக பேசியது துர்திஷ்டவசமாக பழித்துவிட்டது என்பதுதான் இதில் சோகமான விஷயம்.