4 பாடல்களை ஒரே பாட்டாக்கிய எம்.எஸ்.வி.. அஜித் படத்தில் நடந்த மேஜிக்!..

அஜித் நடித்த திரைப்படம் காதல் மன்னன். பாலச்சந்தரிடம் சினிமா கற்ற சரண் இயக்கிய இந்த படம் 1998ம் வருடம் வெளியானது. அஜித் காதல் படங்களில் நடித்து கொண்டிருந்த போது நடித்த திரைப்படம் இது. இந்த படத்தில் திலோத்தமா என்கிற வேடத்தில் மானு என்கிற அறிமுக நடிகை நடித்திருந்தார். மேலும் விவேக், இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், கிரிஷ் கார்னட் மற்றும் கரண் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.
இந்த படத்தில் நடித்ததோடு மட்டுமில்லாமல் உதவி இயக்குனராகவும் வேலை செய்தார் விவேக். இந்த படத்தில் அஜித் தங்கியிருக்கும் மேன்ஷனை நடத்தும் வேடத்தில் எம்.எஸ்.வி நடித்திருந்தார். இந்த படத்தில் அவரை நடிக்க வைப்பது என சரணும், விவேக்கும் முடிவு செய்தனர். ஆனால், எம்.எஸ்.வி சம்மதிக்கவில்லை. சரணும், விவேக்கும் தொடர்ந்து நச்சரித்ததால் ஒரு கட்டத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். இந்த படத்தில் அவர் பாடி நடிப்பது போல ஒரு பாடலும் இருக்கும்.
அவர் பாடும் வரிகளை கேட்டு ஃபீல் ஆகியே அஜித் தன்னுடைய காதலை சொல்ல கதாநாயகியிடம் செல்வார். அப்படித்தான் இந்த படத்தின் கிளைமேக்ஸ் காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய இயக்குனர் சரண், அந்த படத்தில் எம்.எஸ்.வி பாடும் பாடலை ‘நான்தான் கம்போஸ் செய்வேன்’ என எம்.எஸ்.வி சொல்லிவிட்டார்.

நாங்களும் சம்மதித்தோம். பாடல் கம்போசிங்கில் நானும், விவேக்கும் இருந்தோம். அவர் மொத்தம் 4 டியூன்களை வாசித்து காட்டினார். அதில் இரண்டு டியூன்கள் எனக்கு பிடித்திருந்தது. விவேக்குக்கு இரண்டு டியூன்கள். பிடித்திருந்தது. எனவே, இதுதான் வேண்டும் என இருவரும் சண்டை போட்டோம். அதைப்பார்த்த எம்.எஸ்.வி ‘தம்பி. ரெண்டு பேரும் சண்டை போடாதீங்க. இந்த 4 டியூனும் பாட்டில் இருக்கும்’ என்று சொன்னார். சொன்னது போலவே அந்த நான்கு மெட்டுக்களையும் ஒரே பாடலுக்குள் கொண்டு வந்துவிட்டார். அவர் ஒரு ஜீனியர்ஸ்’ என சொல்லி இருக்கிறார்.
எம்.எஸ்.விஸ்வநாதன் கண்ணதாசனுடன் நெருங்கி பழகியவர் என்பதால் அவர் நடத்தும் மெஸ்ஸில் கண்ணதாசன் புகைப்படம் வைக்கப்பட்டிருப்பதோடு, அந்த புகைப்படத்தோடு எம்.எஸ்.வி அடிக்கடி பேசுவது போலவும் காட்சிகளை வைத்திருந்தார்கள். அதன்பின் காதலா காதலா படத்தில் மட்டுமே எம்.எஸ்.வி நடித்திருந்தார். இந்த இரண்டு படங்களையும் தவிர வேறு எந்த படத்திலும் அவர் நடிக்கவில்லை.