“உட்காருடா மடையா”… எம்.எஸ்.வியை கண்டபடி திட்டிய பிரபல தயாரிப்பாளர்… ஆனா நீங்க நினைக்கிற மாதிரி இல்ல…
தமிழ் சினிமாவின் பல கிளாசிக் பாடல்களை இசையமைத்த எம்.எஸ்.விஸ்வநாதன், எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினிகாந்த், கமல்ஹாசன் என பல டாப் ஹீரோக்களின் திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.
எம்.எஸ்.விஸ்வநாதன் தொடக்கத்தில் ஜூபிடர் பிக்சர்ஸ் நிறுவனத்தில் ஆஃபீஸ் பையனாக பணியாற்றிக்கொண்டிருந்தார். அதன் பின்தான் இசையுலகின் மெல்லிசை மன்னராக உயந்தார். இதை பலரும் அறிந்திருப்பார்கள்.
எம்.எஸ்.விஸ்வநாதானுடன் இணைந்து டி.கே.ராமமூர்த்தி இசையமைத்த பல பாடல்கள் மிகவும் ரசிக்கத்தக்க பாடல்களாக திகழ்ந்தன. இருவரும் அக்காலத்தில் வெற்றி இசையமைப்பாளர்களாக வலம் வந்தனர். அவர்களின் புகழ் எங்கோ சென்றது. தமிழ் சினிமா இசையுலகில் ஒரு தவிர்க்க முடியாத இசையமைப்பாளர்களாக உருவாகினர். மேலும் மெல்லிசை மன்னர்கள் என்றும் புகழ்பெற்றனர்.
இவ்வாறு இருவரும் உச்சத்தில் இருந்தபோது, ஒரு நாள் ஜூபிடர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் அதிபரான சோமசுந்தரம் ஒரு புதிய திரைப்படத்திற்கு ஒப்பந்தம் செய்ய விஸ்வநாதன்-ராமமூர்த்தியை அலுவலகத்திற்கு அழைத்திருந்தார். இந்த அழைப்பை தொடர்ந்து அவர்கள் சோமசுந்தரத்தின் அலுவலகத்திற்குச் சென்றனர்.
தனது பழைய முதலாளி கூப்பிடுகிறார் என்பதால் எம்.எஸ்.விஸ்வநாதன் மிகவும் கூச்சத்தோடே சென்றார். அலுவலகத்தில் நுழைந்தவுடன் சோமசுந்தரம் அவர்களை பார்த்து “வாருங்கள் பிரபலமான இசையமைப்பாளர்களே” என்று லேசான கிண்டலோடு அழைத்தாராம். இருவரையும் உட்காரச்சொன்னார் சோமசுந்தரம்.
ஆனால் எம்.எஸ்.விஸ்வநாதன் தனது முதலாளி முன் எப்படி உட்கார்வது என கூச்சப்பட்டுக்கொண்டும் கைகளை கட்டிக்கொண்டும் வெகு நேரம் நின்றுகொண்டே இருந்தாராம். இப்படி சொன்னால் உட்காரமாட்டார் எம்.எஸ்.வி, என்பதை தெரிந்துகொண்ட சோமசுந்தரம், பழைய முதலாளியாகவே மாறி “உட்கார்டா மடையா” என்றாராம். அதன் பிறகுதான் எம்.எஸ்.விஸ்வநாதன் உட்கார்ந்தாராம்.
தான் ஒரு காலத்தில் ஆஃபிஸ் பையனாக பணியாற்றிய நிறுவனத்தில் இருந்து, தற்போது அவர்கள் தயாரிக்கும் திரைப்படத்திற்கு இசையமைக்க வாய்ப்பு கிடைத்திருப்பதை நினைத்து மிகவும் மகிழ்ச்சியுடன் அந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டாராம் எம்.எஸ்.வி. இத்தகவலை தனது வீடியோ ஒன்றில் தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் பகிர்ந்துகொண்டார்.