கிண்டலுக்கு பதிலடி கொடுத்த சந்திரபாபு!.. மன்னிப்பு கேட்ட எம்.எஸ்.விஸ்வநாதன்....
திரையுலகில் ரசிகர்களை கவர்ந்த காமெடி நடிகர்களில் சந்திரபாபு முக்கியமானவர். போராடி சினிமாவுக்குள் வந்தவர். திறமையாக நடனம் ஆடுவார். நல்ல பாடகரும் கூட. இவர் பாடிய அனைத்து பாடல்களுமே சூப்பர் ஹிட்தான். பெரும்பாலும் இவரது பாடல்களில் தத்துவமான கருத்துக்கள் இருக்கும். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் பல பாடல்களை சந்திரபாபு பாடியுள்ளார். இருவரும் நல்ல நண்பர்களாகவே இருந்தனர். ஆனால், இருவரும் நண்பர்கள் ஆவதற்கு முன் சில சம்பவங்கள் நடந்துள்ளது.
சந்திரபாபுவுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைக்காத நேரத்தில் எஸ்.என்.சுப்பையா நாயுடுவிடம் பாடுவதற்கு வாய்ப்பு கேட்டார். அப்போது எம்.எஸ்.விஸ்வநாதன் சுப்பையாவிடம் உதவியாளராக இருந்தார். அவர்தான் பாடகர்களுக்கு மெட்டையும், பாட்டையும் கொடுத்து பாட சொல்லி கொடுப்பார். அதுபோலவே சந்திரபாபுவுக்கும் அவர் சொல்லி கொடுத்தார். ஆனால், சந்திரபாபுவால் சரியாக பாடமுடியவில்லை.
அப்போது அங்கு வந்த சுப்பையா ‘என்ன விஸ்வநாதா பையன் எப்படி பாடுகிறான்?’ எனக்கேட்க எம்.எஸ்.வி ‘தம்பி எங்க பாடுது.. நல்லா பேசுது’ என சொல்ல அங்கிருந்த எல்லாரும் சிரித்துவிட்டனர். இது சந்திரபாபு அவமானமாக போய்விட்டதாம். அதன்பின் சில வருடங்களில் சந்திரபாபு சினிமாவில் நடித்து பிரபலமானார்.
எம்.ஜி.ஆர் நடித்த குலோபகாவலி படத்தில் சந்திரபாபு நடித்தார். அப்படத்தில் அவர் ஆடிப்பாடி நடிக்கும் ஒரு காட்சி இருந்தது. அந்த படத்திற்கு எம்.எஸ்.வியே இசையமைத்தார். அந்த பாடலை பாட சந்திரபாபு சென்ற போது பாடலை எம்.எஸ்.வி பாடி காட்டினார். அப்போது சந்திரபாபு முகத்தை திருப்பி அந்த பக்கம் வைத்திருந்தார். இதைப்பார்த்த எம்.எஸ்.வி ‘நான் பாடுவது கேட்கிறதா?’ என கேட்க, பழசை மறக்காத சந்திரபாபு ‘ஓ நீங்கள் பாடினீர்களா?.. நீங்கள் பேசினீர்கள் என நினைத்தேன்’ என சொன்னாராம். எம்.எஸ்.விக்கு இது புரிந்துபோக சில வருடங்களுக்கு முன் தான் அப்படி பேசியதற்காக சந்திரபாபுவிடம் மன்னிப்பு கேட்டாராம்.
அதன்பின் இருவரும் நல்ல நண்பர்களாக மாறிவிட்டனர். எம்.எஸ்.வியின் இசையில் பல அற்புதமான பாடல்களை சந்திரபாபு பாடியது குறிப்பிடத்தக்கது.