Cinema History
ஒரு படத்திற்கு மூன்று இசையமைப்பாளர்களா?.. விளம்பரத்தை பார்த்ததும் பதறிய எம்.எஸ்.வி..
தமிழ் சினிமாவில் மெல்லிசை மன்னன் என அழைக்கப்படுபவர் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் கிட்டத்தட்ட 1200 படங்களுக்கும் மேல் பல பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார்.
மேலும் முதுமை காலத்தில் ஒரு சில படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து மக்களை ரசிக்க வைத்தார். அதில் மிகவும் குறிப்பிடத்தக்க படம் ‘காதல்மன்னன்’, ‘காதலா காதலா’ போன்ற திரைப்படங்களாகும். இவருக்கு மெல்லிசை மன்னன் என்ற பட்டத்தை கொடுத்தவரே நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தான்.
இவரின் இசையமைத்த பாடல்களில் இன்று வரை நம் மனதை விட்டு நீங்கா பாடலாக இருப்பவை கர்ணன் படத்தில் அமைந்த ‘உள்ளத்தில் நல்ல உள்ளம்’ , சுமைதாங்கி படத்தில் அமைந்த ‘மனிதன் என்பவன் தெய்வமாகலாம்’, புதிய பறவை படத்தில் அமைந்த ‘எங்கே நிம்மதி’ போன்ற பல பாடல்கள் இன்று வரை நம் காதில் இனிமையை சேர்ப்பவையாக அமைந்துள்ளன.
அது மட்டுமில்லாமல் 80களிலும் இளையராஜாவுடன் இணைந்து செந்தமிழ் பாட்டு, துளசி, மெல்ல திறந்தது கதவு போன்ற படங்களுக்கும் இசையமைத்திருக்கிறார். இத்தனை பெருமைக்குரிய ஒரு கலைஞனை சினிமாவில் அறிமுகம் படுத்திய பெருமைக்கு காரணமாக இருப்பவர்களில் இசையமைப்பாளர் கே.வி. மகாதேவனுக்கும் ஒரு பங்கு இருக்கிறது. ஒரு படத்திற்கு இசையமைக்க கோவைக்கு வரச் சொல்லியிருக்கிறார்கள் மகாதேவனை.
ஆனால் கே.வி.மகாதேவனால் போக முடியாத சூழ்நிலை. அப்போது எம்.எஸ்.வி வேலையில்லாமல் இருக்கவே எனக்கு பதிலாக நீ போய் அந்த படத்திற்கு இசையமைத்து இசையமைப்பாளராக ஆகிவிடு என்று சொல்லி அனுப்பியிருக்கிறார். அதனாலேயே எம்.எஸ்.வி இறக்கும் தருவாய் வரைக்கும் கே.வி . மகாதேவன் மீது மிகுந்த மரியாதையை வைத்திருந்தார். இதற்கு ஒரு சிறந்த உதாரணமாக ‘தெய்வ திருமணங்கள்’ என்ற ஒரு ஆன்மீகப் படம். இந்தப் படத்திற்கு மூன்று இசையமைப்பாளர்கள் பணிபுரிந்திருக்கிறார்கள். அவர்கள் எம்.எஸ்.வி, ஜி.கே.வெங்கடேஷ், கேவி.மகாதேவன்.
இந்தப் படத்தின் போஸ்டர் விளம்பரத்தில் தவறுதலாக முதலில் எம்,எஸ்.வி. அடுத்ததாக கே.வி, அதனையடுத்து ஜி.கே.வெங்கடேஷ் பெயர் பிரிண்ட் செய்யப்பட்டு காலையில் பேப்பரில் வெளியாகியிருக்கிறது. இதனை முதலில் காலையிலேயே பார்த்த எம்.எஸ்.வி பதறிப் போய் தயாரிப்பாளரின் வீட்டிற்கு சென்று கே.வி, மகாதேவன் இந்தப் பேப்பரை பார்ப்பதற்கு முன்னதாகவே நாம் இதில் நடந்த தவறை சொல்லிவிட வேண்டும் என கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க : சிவாஜி, எம்ஜிஆருக்கே டஃப் கொடுத்த இயக்குனர்!.. தனக்கென ஒரு பாணியில் வெற்றி வாகை சூடிய அந்த பிரபலம்..
சொன்னப்படி கே,வி. மகாதேவன் வீட்டிற்கும் காலையிலேயே போனவர் நடந்ததை சொல்லி வருத்தப்பட்டிருக்கிறார். அதற்கு கே.வி. இதில் என்ன இருக்கிறது? பரவாயில்லை என்று சொல்லியிருக்கிறார். ஏனெனில் எம்.எஸ்.விக்கு வாழ்க்கைப் பிச்சை போட்டவரின் பெயருக்கு முன்னாடி தம் பெயர் வந்ததை பார்த்து மிகுந்த வருத்தமுற்றிருக்கிறார் எம்.எஸ்.வி. இந்த சம்பவத்திற்கு பிறகு கே.வி. மீது எம்.எஸ்.வி எந்த அளவுக்கு மதிப்பு வைத்திருந்தார் என்பது தெரிகிறது. இந்த சுவாரஸ்ய தகவலை கே.எஸ்.ஸ்ரீநிவாசன் கூறினார்.