எம்.ஜிஆரின் படத்துக்கு நீ இசை அமைக்க கூடாது!.. எம்.எஸ்.வி.க்கு உத்தரவு போட்ட தாயார்!...
நடிகர் எம்.ஜி.ஆரை வளர்த்துவிட்ட தயாரிப்பாளர்களில் தேவர் பிலிம்ஸ் நிறுவனர் சின்னப்ப தேவர் முக்கியமானவர். எம்.ஜி.ஆருக்கு சிறுவயது முதலே நண்பராக இருந்தவர். அவரின் குடும்பம் வறுமையில் வாடிய போது ஓடிச்சென்று உதவி செய்தவர். அதனால்தான் தேவருக்கு கடைசி வரை விசுவாசமாக இருந்தார் எம்.ஜி.ஆர். அவரின் தயாரிப்பில் பல படங்களில் நடித்து கொடுத்தார்.
எம்.ஜி.ஆரை சூப்பர் ஹீரோவாக காட்டி ரசிகர்களின் மனதில் பதிய வைத்தவர் சின்னப்ப தேவர்தான். தாய்க்குபின் தாரம், நீலமலை திருடன், தாய் சொல்லை தட்டாதே, தர்மம் தலை காக்கும், வேட்டைக்காரன், நீதிக்கு பின் பாசம், முகராசி, தனிப்பிறவி, தாய்க்கு தலைமகன், விவசாயி, நல்ல நேரம் என பல படங்களை எம்.ஜி.ஆரை வைத்து சின்னப்ப தேவர் தயாரித்தார்.
அதேபோல், தேவர் பிலிம்ஸ் படம் என்றாலே கே.வி.மகாதேவன்தான் ஆஸ்தான இசையமைப்பாளராக இருப்பார். ஒருபக்கம். எம்.எஸ்.விஸ்வநாதனும் திரைத்துறையில் வளர்ந்து நிறைய படங்களுக்கு இசையமைத்து கொண்டிருந்தார். எம்.ஜி.ஆரை வைத்து தான் எடுக்கும் வேட்டைக்காரன் படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதனை இசையமைக்க வைக்க சின்னப்பதேவர் விரும்பினார். நேராக எம்.எஸ்.வி வீட்டிற்கே சென்று இதுபற்றி பேசினார். அப்போது எம்.எஸ்.வியை அழைத்த அவரின் தயார் இந்த படத்திற்கு நீ இசையமைக்கக் கூடாது என கூறிவிட்டார்.
அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. கே.வி.மகாதேவன் இசையமைத்த பல படங்களில் கும்பலில் ஒருவராக கோரஸ் பாடியவர்தான் எம்.எஸ்.வி. ஒருநாள் அவரை அழைத்து ‘நீ இப்படியே கோரஸ் பாடிக்கொண்டிருந்தால் உன்னுடைய எதிர்காலம் என்னவாகும். நீயும் தனியாக இசையமைக்க துவங்கு. உனக்கு அந்த ஞானம் இருக்கிறது’ என நம்பிக்க்கை கொடுத்து அனுப்பி வைத்தவர் கே.வி.மகாதேவன்தான். அதனால், அவர் இசையமைக்கும் தேவர் பிலிம்ஸ் படங்களில் தனது மகன் இசையமைக்க கூடாது என்பதற்காகத்தான் அவரை தடுத்துள்ளார். அதன்பின் வேட்டைக்காரன் படத்திற்கு கே.வி.மகாதேவன்தான் இசையமைத்தார்.
நியாயமாக நடந்து கொள்வது, மனசாட்சியுடன் நடந்து கொள்வது, நன்றியுணர்வுடன் நடந்து கொள்வது என்பதெல்லாம் அப்போதைய திரையுலகில் இருந்தது என்பதற்கு இதுவும் ஒரு முக்கிய உதாரணம் ஆகும்.
இதையும் படிங்க: லியோ படத்தில் நடிக்க சஞ்சய் தத் ஒப்புக்கொண்டது ஏன் தெரியுமா?!.. இப்படி ஒரு காரணமா?!..