“வாலி பாட்டு எழுதனுமா? வேற வேல இருந்தா பாக்கச்சொல்லுங்க”… திருப்பி அனுப்பிய எம்.எஸ்.வி…
தொடக்கத்தில் நாடகத்துறையில் கதாசிரியராக இயங்கிகொண்டிருந்த கவிஞர் வாலி, பல கவிதைகளையும் எழுதி வந்தார். அந்த சமயத்தில் “பாசவலை” என்ற திரைப்படத்தை பார்த்த வாலி, அதில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய பாடல் வரிகளால் மிகவும் அசந்துபோனார். அதன் பின்தான் வாலிக்கு சினிமாவில் பாடல்கள் எழுதவேண்டும் என்ற ஆசை வந்தது.
“பாசவலை” திரைப்படத்தில் நடித்த வி. கோபாலகிருஷ்ணனை பாராட்டி அவருக்கு ஒரு கடிதத்தை எழுதினார் வாலி. அதனை தொடர்ந்து வாலி எழுதிய ஒரு நாடகத்தை திருச்சியில் பார்க்க வந்த கோபாலகிருஷ்ணனிடம் தான் சினிமாவில் பாடல்கள் எழுதப்போவதாக கூறினார் வாலி. இதனை கேட்ட கோபாலகிருஷ்ணன் உடனே வாலியை கிளம்பி வரச்சொன்னார்.
அதன் பின் சென்னைக்கு கிளம்பி வந்த வாலியை கோபாலகிருஷ்ணன் எம்.எஸ்.விஸ்வநாதனிடம் அழைத்துச்சென்றிருக்கிறார். இசையமைப்பாளர் எம்.எஸ்.வியும் கோபாலகிருஷ்ணனும் நெருங்கிய நண்பர்கள். ஆதலால் வாலி, தனக்கு எம்.எஸ்.வி இசையிலேயே பாடல் எழுத வாய்ப்பு கிடைத்துவிடும் என நினைத்து சந்தோஷப்பட்டார்.
ஆனால் நடந்ததோ வேறு. கோபாலகிருஷ்ணனும் வாலியும் எம்.எஸ்.வியின் வீட்டிற்கு சென்றபோது கோபாலகிருஷ்ணனை ஆரத்தழுவி கட்டிப்பிடித்துக்கொண்டார் எம்.எஸ்.வி. இதை பார்த்த வாலி, “இவ்வளவு நெருக்கமான நண்பர்களா? அப்படி என்றால் கண்டிப்பாக நமக்கு வாய்ப்பு கிடைத்துவிடும்” என மனதில் நினைத்துக்கொண்டாராம்.
அப்போது வாலியை எம்.எஸ்.விக்கு அறிமுகப்படுத்திய கோபாலகிருஷ்ணன், வாலி எழுதிய ஒரு பாடல் புத்தகத்தையும் எம்.எஸ்.வியிடம் கொடுத்தார். அதனை படித்து பார்த்த எம்.எஸ்.வி., கோபாலகிருஷ்ணனை தனியாக அழைத்திருக்கிறார். அப்போதே வாலிக்கு தெரிந்துவிட்டதாம் தனக்கு வாய்ப்பில்லை என்று.
எம்.எஸ்.வியிடம் தனியாக பேசிவிட்டு திரும்பி வந்து வாலியை “வா போகலாம்” என்றிருக்கிறார் கோபாலகிருஷ்ணன். அப்போது எம்.எஸ்.வி. கூறியதை வாலியிடம் சொல்லினார் கோபாலகிருஷ்ணன். “இவர் பாட்டெல்லாம் நல்லா இல்லை, அதான் பள்ளிப்படிப்புலாம் படிச்சிருக்காரே. எதாவது கவர்மெண்ட் ஆஃபிஸில் வேலை பார்க்கச்சொல்.
எதுக்கு வீணா மெட்ராஸ்ல சுத்திக்கிட்டு” என எம்.எஸ்.வி வாலியை குறித்து கூறினாராம். இதனை கோபாலகிருஷ்ணன் வாலியிடம் கூறியபோது வாலியின் மனம் நொந்துபோய்விட்டதாம். எனினும் அதன் பின் எம்.எஸ்.வியும் வாலியும் இணைந்து பல கிளாசிக் பாடல்களை உருவாக்கினார்கள் என்பது வரலாறு.