வற்புறுத்திய ஏ.ஆர்.ரகுமான்... ட்யூன் பிடிக்காமல் பாடிக்கொடுத்த எம்.எஸ்.வி...ஆனா பாடல் சூப்பர்ஹிட்... என்ன பாட்டு தெரியுமா?
எவ்வளவு பெரிய வித்தகனாக இருந்தாலும் ஒரு இடத்தில் சின்ன சறுக்கல் ஏற்படத்தான் செய்யும். சில படங்களோ, பாடல்களோ ப்ளாப் ஆகும் என சினிமா ஜாம்பவான்களே கணிக்க ரசிகர்களின் கணிப்பு வேறாக இருக்கும். அப்படி ஒரு சிக்கலில் எம்.எஸ்.விஸ்வநாதன் சிக்கிய சுவாரஸ்ய சம்பவமும் நடந்து இருக்கிறது.
மெல்லிசை மன்னர்:
கோலிவுட்டின் மெல்லிசை மன்னராக இருப்பவர் எம்.எஸ்.விஸ்வநாதன். இவரை ரசிகருக்கும் பிடிப்பதே அவரின் எளிமையான தோற்றத்துடன், இனிமையான குரலுக்கும் தான். முதலில் பிரபல இசை ஸ்டுடியோவில் உதவியாளராக இருந்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன். பெரிதாக படக்குழுவினருடன் சண்டைக்கே போகாதவர். இயக்குனருக்கோ, தயாரிப்பாளருக்கோ தேவையானதை கொடுப்பதையே விரும்புவார். இதனாலே இவரை படத்தில் ஒப்பந்தம் செய்தால் கவலை இல்லாமல் வெற்றி பாடல்கள் கிடைத்து விடும் என அப்போதே ஒரு எண்ணம் நிலவியது.
எம்.எஸ்.வி, ஏ.ஆர்.ரஹ்மான் சந்திப்பு:
பல வருட உழைப்புக்கு பிறகு சினிமாவில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக ஒதுங்கி கொண்டே வந்தார் எம்.எஸ்.விஸ்வநாதன். அப்போது ஒருமுறை இவரின் வீட்டிற்கு ஏ.ஆர்.ரஹ்மான் நேரில் சந்திக்க வருகிறார். அவரை பார்த்த எம்.எஸ்.விக்கும் சந்தோஷம். என்னப்பா இந்த பக்கம் எனக் கேள்வி கேட்கிறார். ஐயா என்னுடைய அடுத்த படத்தில் நீங்க ஒரு பாட்டு பாட வேண்டும். அதற்காக தான் வந்தேன் எனக் கூறுகிறார். எம்.எஸ்.வியோ நான் இப்போலாம் பாடுவதே இல்லையே என மறுத்துவிட ரஹ்மானோ தன்னுடைய ட்யூனை கொடுத்து கேளுங்கள் என சொல்லிவிட்டு சென்றாராம்.
அதை கேட்ட எம்.எஸ்.விக்கு மேலும் குழப்பம் இதுக்கு எப்படி பாட முடியும். சரி முடியாது என சொல்லிவிடுவோம் என ரஹ்மான் வீட்டிற்கு செல்கிறார். அந்த நாள், ரஹ்மானின் பிறந்தநாளாக இருந்து இருக்கிறது. இவரை பார்த்த ரஹ்மான் ஆர்வத்துடன் வரவேற்றார். சொல்லி இருந்தால் நானே வந்திருப்பேனே ஐயா எனக் கேட்டாராம்.
ஆலாலகண்டா பாடல் உருவான விதம்:
இல்லை உன் பிறந்தநாள் எனக் கேள்விப்பட்டேன். அதற்காக நேரில் வாழ்த்த வந்தேன் எனக் கூறினாராம். முடியாது என இப்போது கூறினால் அது அவருக்கு ஏமாற்றமாக தானே இருக்கும் என நினைத்த எம்.எஸ்.வி பாடல் பாட ஓகே சொல்லிவிட்டாராம்.
எம்.எஸ்.விக்கே பிடிக்காமல் கம்போஸ் செய்த பாடல் தான் “சங்கமம்” படத்தில் வரும் “ஆலாலகண்டா ஆடலுக்குத் தகப்பா வணக்கமுங்க” என்ற பாடல். ரஹ்மானை மட்டுமல்ல ரசிகர்கள் எம்.எஸ்.வியையும் ஏமாற்றவில்லை. பாடல் இன்று வரை ஹிட் பட்டியலில் தான் இருக்கிறது.