எஸ்கேப் ஆக நினைத்த எம்.எஸ்.வியை துரத்தி பிடித்த எம்.ஜி.ஆர்… ஒரு படத்துக்கு இவ்வளவு அக்கப்போரா?..
1973 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர், மஞ்சுளா, லதா, நம்பியார் ஆகியோரின் நடிப்பில் வெளியாகி மாபெறும் வெற்றி பெற்ற திரைப்படம் “உலகம் சுற்றும் வாலிபன்”. இத்திரைப்படத்தை எம்.ஜி.ஆரே தயாரித்து இயக்கியிருந்தார். இத்திரைப்படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருந்தார்.
“உலகம் சுற்றும் வாலிபன்” திரைப்படம் உருவாவதற்கு முன்பு, ஒரு நாள் எம்.எஸ்.வியை தொடர்பு கொண்ட எம்.ஜி.ஆர், “நீ எம்ஜியார் பிக்சர்ஸ் நிறுவனத்தின் எந்த படத்திற்கும் இசையமைத்ததில்லைதானே. இப்போது நான் ஒரு புதிய படத்தை தயாரிக்கிறேன். இந்த படத்திற்கு நீதான் இசையமைக்க வேண்டும்” என்று கூறினாராம். எம்.எஸ்.வியும் “சரி” என்று தலையாட்டிவிட்டார்.
அதன் பின் சில நாட்கள் கழித்து ஒரு நாளிதழில் “எம்.ஜி.ஆர் இயக்க இருக்கும் உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்திற்காக குன்னக்குடி வைத்தியநாதன் இசையில் 4 பாடல்கள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது” என ஒரு செய்தி வெளிவந்திருந்தது. இந்த செய்தியை பார்த்து குழம்பிப் போனாராம் எம்.எஸ்.வி.
“எம்.ஜி.ஆர் அவராகத்தானே நம்மை இசையமைக்கச் சொல்லி கேட்டார். இப்போது என்ன குன்னக்குடி வைத்தியநாதன் இசையமைப்பதாக செய்தி வந்திருக்கிறது” என தனக்கு தானே பேசிக்கொண்ட எம்.எஸ்.வி, இது குறித்து எம்.ஜி.ஆரிடம் எதுவும் கேட்கவே இல்லையாம்.
இதற்கு பின் சில நாட்கள் கழித்து எம்.ஜி.ஆரிடம் இருந்து மீண்டும் தொலைப்பேசியில் அழைப்பு வந்தது. அப்போது எம்.ஜி.ஆர் “உன் மனசுல என்னதான் நினைச்சிக்கிட்டு இருக்க. உலகம் சுற்றும் வாலிபன் படத்துக்கு நீதான் இசையமைக்கனும்ன்னு நான் ஏற்கனவே சொன்னேன். நீ என் ஆஃபீஸ் பக்கம் வரவே இல்லை. ஒரு ஃபோன் கூட பண்ணவில்லை” என கூறினாராம்.
இதனை கேட்ட எம்.எஸ்.வி. “அண்ணே, நீங்க என்ன சொன்னாலும் சரி, இந்த படத்துக்கு என்னால இசையமைக்க முடியாது” என கூறினாராம். எம்.ஜி.ஆர் “ஏன்?” என கேட்க, “உங்க படத்துக்கு குன்னக்குடி வைத்தியநாதன் இசையமைக்கிறார் என்ற செய்தியையும், ஏற்கனவே நான்கு பாடல்கள் பதிவு செய்தாகிவிட்டது என்ற செய்தியையும் நான் நாளிதழில் படித்தேன். குன்னக்குடி வைத்தியநாதனை வைத்து ஆரம்பித்த படத்தை குன்னக்குடி வைத்தியநாதனை வைத்து முடிப்பதுதான் சரியானது. நீங்கள் அவரை வைத்தே இசையமைத்துக்கொள்ளுங்கள். என்னை மன்னிச்சுடுங்க. என்னால் இசையமைக்க முடியாது” என்று கூறிவிட்டு ஃபோனை வைத்துவிட்டார்.
அதன் பின் எம்.ஜி.ஆர், எம்.எஸ்.வியின் வீட்டிற்கு ஆள் அனுப்பி அவரை அழைத்து வரச்சொன்னார். நேரில் பேசி சம்மதிக்க வைத்துவிடலாம் என்று நினைத்தாராம் எம்.ஜி.ஆர். அப்படியும் எம்.எஸ்.வி சம்மதிக்கவில்லை. ஆனாலும் எம்.ஜி.ஆர் விடவில்லை.
எம்.எஸ்.வியின் தாயாருக்கு தொலைப்பேசியில் அழைத்து, “உங்கள் மகன் எப்படி செய்கிறார் பாருங்கள். அவனிடம் பேசி சம்மதிக்க வையுங்கள்” என எம்.ஜி.ஆர் கூறினாராம். அதற்கு எம்.எஸ்.வியின் தாயார் “என் பையன் என் கிட்ட எல்லா விஷயத்தையும் சொல்லிட்டான். அவன் காரணம் இல்லாம எதுவும் செய்யமாட்டான். அதனால் இந்த ஒரு படத்துல மட்டும் அவனை விட்ருங்களேன்” என கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து சில நாட்களில் “உலகம் சுற்றும் வாலிபன்” திரைப்படத்தின் பூஜை நடைபெற்றது. அதில் எம்.எஸ்.வியை கலந்துகொள்ளுமாறு எம்.ஜி.ஆர் அழைத்தார். அங்கே சென்ற எம்.எஸ்.வி, குன்னக்குடி வைத்தியநாதனை பார்த்து தனது வாழ்த்துகளை கூறினார்.
ஆனால் குன்னக்குடி வைத்தியநாதனோ “அண்ணா, நீங்களே இந்த படத்துக்கு இசையமைச்சிடுங்க. இந்த படத்துக்கு எனக்கு என்ன சம்பளம் கொடுக்கனுமோ அதை முழுசா எம்.ஜி.ஆர் எனக்கு கொடுத்துட்டார். தனது அடுத்த படத்தில் எனக்கு சான்ஸ் தருவதாகவும் எம்.ஜி.ஆர் கூறியிருக்கிறார். அதனால் நீங்க இசையமைக்குறது எனக்கு சந்தோஷம்தான்” என எம்.எஸ்.வியை பார்த்து கூறினார்.
இதையும் படிங்க: மணி சார் ஆஃபீஸில் கார்த்தி செய்த காரியம்… திடீரென உள்ளே நுழைந்த இயக்குனரால் ஷாக் ஆன நடிகர்…
இவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்ததை தூரத்தில் இருந்த எம்.ஜி.ஆர், நமட்டுச் சிரிப்புடன் பார்த்துக்கொண்டே இருந்தாராம். அதாவது எம்.எஸ்.வியை பூஜைக்கு அழைத்ததே எப்படியாவது இந்த படத்திற்கு இசையமைக்க அவரை சம்மதிக்க வைக்க வேண்டும் என்பதற்காகத்தான். இறுதியில் அது ஒரு வழியாக நிறைவேறிவிட்டது. எம்.எஸ்.வி “உலகம் சுற்றும் வாலிபன்” திரைப்படத்திற்கு இசையமைக்க ஒரு வழியாக ஒப்புக்கொண்டார்.