கண்டவனெல்லாம் பாட்டு எழுதுறதா?!. வாலியை அவமானப்படுத்திய பிரபல இசையைமைப்பாளர்…
எந்த சினிமா பிரபலமும் இல்லாமல் ஸ்ரீரங்கத்திலிருந்து சென்னை வந்து வறுமையால் வாடி பாடல்கள் எழுத வாய்ப்பு தேடி அலைந்து சில வாய்ப்புகள் கிடைத்து படிப்படியாக முன்னேறி எம்.ஜி.ஆருக்கே ஆஸ்தான பாடலாசிரியராக மாறியவர் மறைந்த கவிஞர் வாலி. எம்.ஜி.ஆர் நடித்த 63 திரைப்படங்களிலும், சிவாஜி நடிப்பில் உருவான 66 படங்களிலும் வாலி பாடல்களை எழுதியுள்ளார். அதோடு, ரஜினி, கமல், பிரபு, கார்த்தி, விஜய், அஜித் என பலருக்கும் பாடல்களை எழுதி வாலிப கவிஞர் வாலியாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
இவரும், நடிகர் நாகேஷும் ஒரே அறையில் தங்கி வாய்ப்பு தேடினார்கள். நாகேஷ் சினிமாவில் நடிக்க வாய்பு தேடினார். துவக்கத்தில் வாலிக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை. 4 வருடங்களில் சில பாடல்களை மட்டுமே எழுதியிருந்தார். அதன்பின் மெல்ல மெல்ல வாய்ப்புகள் கிடைத்து கண்ணதாசனுக்கு போட்டியாக வந்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.
இவர் வாய்ப்பு தேடி அலைந்த போது ஒரு படத்தில் பாட்டெழுத வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தில் அப்போது பிரபல இசையமைப்பாளராக இருந்தவர் இசையமைத்தார். ஒலிப்பதிவு கூடத்தில் வாலி இருந்தபோது அவரின் காதுபடவே ‘கண்டவனெல்லாம் பாட்டு எழுதுவதா?.. உங்கள் படம் ஹிட் ஆக வேண்டாமா?’ என தயாரிப்பாளரிடம் கேட்டாராம். இது வாலிக்கு பெரிய அவமானமாக போய்விட்டது.
அதன்பின் ஒரே வருடத்தில் எம்.ஜி.ஆரின் 9 படங்களில் பாட்டெழுதி வாலி பிரபலமாகிவிட்டார். அப்போது அவரை அவமானப்படுத்திய அந்த இசையமைப்பாளரின் இசையில் உருவான ஒரு படத்தில் பாட்டெழுத வாலி மறுத்துவிட்டாராம். இதை கேள்விப்பட்டு அந்த இசையமைப்பாளரே வாலியை நேரில் தேடி வந்து அப்போது அவர் பேசியதற்கு வருத்தம் தெரிவித்து வாலியை சமாதானம் செய்தாராம்.
அந்த இசையமைப்பாளர் வேறு யாருமல்ல. கருப்பு, வெள்ளை காலத்தில் பல அற்புதமான பாடல்களை கொடுத்த கே.வி.மகாதேவன் என்பது குறிப்பிடத்தக்கது.