சந்திரபாபுவுக்கு கடைசி வரை எம்.எஸ்.வி செய்த உதவி!.. இப்படி ஒரு நட்பா?!…

1950,60களில் தமிழ் சினிமாவில் முக்கிய காமெடி நடிகராக இருந்தவர் சந்திரபாபு. எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகியோரின் படங்களில் அதிகம் நடித்திருக்கிறார். நடிப்பு, நடனம், பாடுவது என பல திறமைகளை கொண்டவர் இவர். நிறைய திறமை கொண்டவர் என்பதால் இவருக்கு தலைக்கணம் அதிகம். அதனால், எல்லோருடனும் சண்டை போடுவார்.
சில சமயம் இவர் பேசுவதும், செய்வதும் எம்.ஜி.ஆருக்கே பிடிக்காது. சந்திரபாபுவிடம் மது அருந்துவது உள்ளிட்ட நிறைய கெட்டப் பழக்கங்கள் இருந்தது. எம்.ஜி.ஆர் உள்ளிட்ட பலர் சொல்லியும் அவர் தன்னை மாற்றிக்கொள்ளவில்லை. கோபம் வந்தால் சந்திரபாபு என்ன வேண்டுமானால் செய்வார்.
சினிமாவில் சரியாக வாய்ப்புகள் கிடைக்காத நேரம். ஜெமினி ஸ்டுடியோஸ் நிறுவனத்திற்கு அடிக்கடி சென்று வாய்ப்பு பேட்டார். அப்போது அங்கு காஸ்டிங் மேனேஜராக வேலை செய்து வந்தவர் கணேசன். சந்திரபாபுவுக்கு அவர் வாய்ப்பு கொடுக்கவில்லை. நீங்கள் எனக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை எனில் விஷம் குடிப்பேன் என சொல்லி அங்கேயே விஷத்தை குடித்தார் சந்திரபாபு.
பதறிய கணேசன் அவரை மருத்துவமனையில் சேர்த்து உயிர் பிழைக்க வைத்தார். அந்த கணேசன்தான் பின்னாளில் ஜெமினி கணேசனாக மாறினார். ஒருகட்டத்தில் வாய்ப்புகள் பெற்று முன்னேறினார் சந்திரபாபு. காமெடி மட்டுமில்லாமல் நடனம், பாட்டு பாடுவது என எல்லாவற்றிலும் கில்லியாக இருந்தார் சந்திரபாபு. இவர் பாடிய எல்லா பாடல்களுமே சூப்பர் ஹிட் அடித்தது. சொந்த வாழ்வில் செய்த சில தவறுகளாலும், மதுப்பழக்கம் மற்றும் சினிமா தயாரித்து நஷ்டப்பட்டதாலும் நொடிந்து போய் உயிரை விட்டார் சந்திரபாபு.
இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய மறைந்த இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனின் மகன் பிரகாஷ் ‘சந்திரபாபுவும், அப்பாவும் நல்ல நண்பர்கள் கடைசி காலத்தில் ஆழ்வார்பேட்டையில் ஒரு சின்ன வீட்டில் ஒரு சிறிய ரூமில் சந்திரபாபு குடியிருந்தார். வீட்டுக்கு கீழே ஒரு மாட்டுக்கொட்டை இருக்கும். அவருக்கு 3 வேளை சாப்பாடு எங்கள் வீட்டில் இருந்தே போகும். அதை நிறுத்தக்கூடாது என அப்பா சொல்லிவிட்டார். ஆர்.எஸ்.மனோகரும், தேங்காய் சீனிவாசனும் அவருக்கு மது வாங்கி கொடுப்பார்கள். அப்பா மது வாங்கி கொடுக்க மாட்டார். சாப்பாடு மட்டுமே அனுப்புவார். அவர்களுக்குடையே அப்படி ஒரு நட்பு’ என பேசியிருந்தார்.
சினிமாவில் சம்பாதித்த பணத்தில் கீழே இருந்து அவரின் பெட் ரூமுக்கே கார் செல்லும்படியெல்லாம் ஒரு ஆடம்பர வீட்டை கட்டினார் சந்திரபாபு. ஆனால், குடிப்பழக்கம், சினிமாவில் படங்களை தயாரித்து சந்தித்த நஷ்டம் காரணமாக வாழ்க்கையில் நொடிந்து போய் மற்றவர்களின் உதவியாலேயே வாழ்ந்து இறந்தும்போனார் சந்திரபாபு.