இரண்டாம் பாகங்களில் கவனம் செலுத்தும் பிசாசு இயக்குனர்....
கோலிவுட்டை பொருத்தவரை ஒரு படம் வெளியாகி ஹிட் அடித்தால் போதும் தொடர்ந்து அதன் அடுத்தடுத்த பாகங்களை எடுத்து ரசிகர்களை வெறுப்பேற்றி விடுவார்கள். அந்த வகையில் சூர்யா மற்றும் ஹரி கூட்டணியில் உருவான சிங்கம் படம் மூன்று பாகங்களாக வெளியானது குறிப்பிடத்தக்கது. சில படங்களுக்கு அடுத்த பாகங்கள் வராமல் இருப்பதே நல்லது.
ஆனால் பிரபல இயக்குனர் ஒருவர் அடுத்தடுத்து அவரது வெற்றி படங்களின் இரண்டாம் பாகங்களை இயக்க உள்ளார். முதல் பாகம் வெற்றி பெற்றதால் இரண்டாம் பாகமும் வெற்றி பெறும் என கூற முடியாது. இருப்பினும் இவரது முயற்சி கைகொடுக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
அந்த இயக்குனர் வேறு யாருமல்ல இயக்குனர் மிஷ்கின் தான். இவர் தற்போது இவரது இயக்கத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் ஆண்ட்ரியா, பூர்ணா, விஜய் சேதுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.
இப்படம் கிட்டத்தட்ட முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மிஷ்கின் அவரது இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற அஞ்சாதே படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க உள்ளாராம். நரேன் மற்றும் அஜ்மல் நடிப்பில் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியாகி சக்கைப்போடு போட்ட படம் தான் அஞ்சாதே.
தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை தான் மிஷ்கின் கையில் எடுத்துள்ளார். இதில் நடிகர் அருண் விஜய் நாயகனாக நடிக்க உள்ளாராம். மேலும், அஞ்சாதே படத்தின் தயாரிப்பாளர் நேமிசந்த் ஜபக்கோடு சேர்ந்து மிஷ்கின் மற்றும் அருண் விஜய் ஆகிய இருவரும் சேர்ந்து இப்படத்தை தயாரிக்க உள்ளார்களாம். விரைவில் இதற்கான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.