நான் கேட்பதை கொடுப்பதுதான் ராஜாவின் வேலை!..அதுதான் சண்டை!.. ஓப்பனாக பேசிய மிஷ்கின்...
திரையுலகில் பல வருடங்களாக இசை சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பவர் இசைஞானி இளையராஜா. 15 வருடங்கள் அவரை தவிர தமிழ் சினிமாவில் எந்த இசையமைப்பாளர்களும் கோலோச்சவில்லை. பல திரைப்படங்களை இளையராஜாவின் இசைதான் காப்பாற்றியது. திரைப்படங்களை காப்பாற்றும் இளையராஜா இயக்குனர்கள், தயாரிப்பாளர்களால் காக்க வந்த கடவுளாக பார்க்கப்பட்டார். படத்தில் ஒன்னுமில்லை என்றும் அவரின் இசைக்காகவே பல படங்கள் ஓடியது.
ஆனால், ஏ.ஆர்.ரகுமான், தேவா உள்ளிட்ட இசையமைப்பாளர்கள் வந்ததால் ராஜா இசையமைக்கும் படங்களின் எண்ணிக்கை குறைந்தது. ஆனால், பாலுமகேந்திரா, தங்கர்பச்சான், மிஷ்கின், பாலா போன்ற சில இயக்குனர்கள் தங்களின் படங்களுக்கு அவரின் இசையை மட்டுமே பயன்படுத்தினர். ஆனால், அவர்களோடும் மோதல் போக்கை கடை பிடித்தார் இளையராஜா. அதாவது, ஏதோ ஒரு விஷயத்தில் கோபத்தை காட்டிவிடுவார் இளையராஜா. எனவே, அவர்களும் ராஜாவிடமிருந்து விலகிவிட்டனர்.
ராஜா மீது மிகப்பெரிய அபிப்ராயம் வைத்திருப்பவர் மிஷ்கின். அவரை தனது அப்பா என்றே பேட்டிகளில் கூறுவார். மிஷ்கின் இயக்கத்தில் உருவான நந்தலாலா மற்றும் சைக்கோ ஆகிய படங்களுக்கு ராஜாதான் இசையமைத்தார். ஆனால், சைக்கோ படத்தில் அவருக்கும் மிஷ்கினுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதுபற்றி ஒரு பேட்டியில் பேசியுள்ள மிஷ்கின் ‘ சைக்கோ படத்தில் இடம் பெற்ற உன்ன நினைச்சேன் பாடலில் நான் சொன்ன மாற்றங்கள் அவருக்கு பிடிக்கவில்லை. அந்த பாடலை கபிலன் எழுதக்கூடாது என அவர் சொன்னார். நான் கபிலனை வைத்து எழுதினேன். அந்த பாடலை சித் ஸ்ரீராம் பாடுவதில் ராஜாவுக்கு உடன்பாடு இல்லை. ஆனால், நான் அவர்தான் பாட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். இதனால் ராஜா அதிருப்தி அடைந்தார்.
அவர் எனக்கு அப்பா போன்றவர். நான் எப்போதும் அவருக்கு கீழேதான். தமிழ் சினிமாவே அவருக்கு கீழேதான். ஆனால், ஒரு இயக்குனராக எனக்கு என்ன வேண்டும் என்பது என் உரிமை. அதற்காக சண்டை போடுவது நியாயம்தான். இளையராஜாவே என்றாலும் அவரும் ஒரு டெக்னீஷன்தான். நான் கேட்பதை அவர் கொடுக்க வேண்டும். சினிமா என்பது ஒரு இயக்குனரின் பார்வை. எந்த பெண்ணை திருமணம் செய்வது என்பதை நான்தான் முடிவு செய்ய வேண்டும். என் அப்பா அல்ல. அப்படித்தான் இதுவும்’ என மிஷ்கின் பேசியுள்ளார்.