இன்று வரை முறியடிக்கப்படாத சாதனையை நிகழ்த்திய எம்ஜிஆர் படம்... என்னன்னு தெரியுமா?
தமிழ்ப்பட உலக வரலாற்றிலேயே இப்படி ஒரு படத்தைப் பார்த்திருக்க முடியாது. அது மக்கள் திலகம் எம்ஜிஆரின் படம். 1958ல் வெளியாகி பட்டி தொட்டி எங்கும் சக்கை போடு போட்ட அந்த படம் தான் நாடோடி மன்னன். இந்தப்படத்தில் என்னென்ன சிறப்பம்சங்கள் என்று பார்ப்போம்.
தமிழில் இதுவரை வந்த படங்களிலேயே இதுதான் மிக நீளமான படம். 220 நிமிடம் ஓடக்கூடியது. கிட்டத்தட்ட மூணே முக்கால் மணி நேரம். இதற்கு முன் வெளியான ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி 214 நிமிடம். சம்பூர்ண ராமாயணம் படம் 204 நிமிடம் என்ற வகையில் தான் வந்துள்ளது.
இவ்வளவு பெரிய படமாக இருந்தாலும் கொஞ்ம் கூட போரடிக்காமல் எடுத்திருப்பார் எம்ஜிஆர். இந்தப் படத்தை தயாரித்து இயக்கியவரும் அவர் தான். அந்தக்காலத்தில் இந்தப் படத்திற்கு 2 இடைவேளை விடுவார்களாம். இன்றைய காலகட்டத்தில் இந்த ஒரு படம் 2 படம் பார்த்ததற்குச் சமம்.
படத்தில் கதாநாயகியாக பானுமதி நடித்தார். பாதி படத்தில் அவர் விலகிவிட அவருக்கு பதில் சரோஜாதேவியை எம்.ஜி.ஆர் நடிக்க வைத்தார். அருமையான நடிப்பு. நம்பியார், பி.எஸ்.வீரப்பாவின் நடிப்பு பட்டையைக் கிளப்பும் ரகம். படத்தின் பட்ஜெட் குறைவு தான் என்றாலும் பட்டையைக் கிளப்பியது.
ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்திற்கு முன்பு வரை நடிகர் திலகத்தின் ரசிகர்களாக இருந்தவர்கள் கூட இந்தப் படம் வந்தபிறகு எம்ஜிஆர் ரசிகர்களாகி விட்டனர். படத்தில் எம்ஜிஆர் நாடோடியாகவும், மன்னனாகவும் நடித்து அசர வைப்பார்.
எம்.ஜி.சக்கரபாணி, சந்திரபாபு, எம்.என்.ராஜம், சரோஜா தேவி, ஜி.சகுந்தலா, டி.பி.முத்துலட்மி, அங்கமுத்து உள்பட பலர் நடித்திருந்தனர். எம்.சுப்பையா நாயுடுவின் இசையில் பாடல்கள் அனைத்துமே அருமையிலும் அருமை. கண்ணில் வந்து மின்னல் போல், கண்ணோடு கண்ணு, தூங்காதே தம்பி, உழைப்பதிலா, தடுக்காதே, மானைத்தேடி மச்சான், சும்மா கிடந்த, வருக வருக வேந்தே, செந்தமிழே ஆகிய முத்து முத்தான பாடல்கள் உள்ளன.
ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் பல திரையரங்குகளில் 100 நாள்களுக்கு மேல் ஓடி பாக்ஸ் ஆபீஸில் ஹிட்டானது.