“நடிப்புல கோட்டவிட்டுடாதீங்க சிவாஜி”… முதல் சந்திப்பிலேயே தெனாவட்டாக பேசிய நாகேஷ்… ரொம்ப தைரியம்தான்!!
தமிழ் சினிமாவின் பழம்பெரும் நகைச்சுவை நடிகராக திகழ்ந்தவர் நாகேஷ். “சர்வர் சுந்தரம்”, “நீர்க்குமிழி” போன்ற பல திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். எம்.ஜி.ஆர், சிவாஜி போன்ற தமிழ் சினிமாவின் மாபெரும் ஜாம்பவான்களுடனும் காமெடி நடிகராக கலக்கியவர் நாகேஷ்.
நாகேஷ், சிவாஜி கணேசனுடன் முதன்முதலாக இணைந்து நடித்த திரைப்படம் “நான் வணங்கும் தெய்வம்”. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பில் நடந்த ஒரு சுவாரஸ்யமான தகவல் குறித்து தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் ஒரு வீடியோவில் பகிர்ந்துள்ளார்.
அதாவது, “நான் வணங்கும் தெய்வம்” திரைப்படத்தின் படப்பிடிப்புத் தளத்திற்குள் முதல் நாள் நாகேஷ் நுழைந்தபோது, சிவாஜி கணேசன் ஒரு நாற்காலியில் அமர்ந்து செய்தித்தாள் படித்துக்கொண்டிருந்தாராம். அத்திரைப்படத்தின் இயக்குனர், சிவாஜி கணேசனிடம் நாகேஷை அழைத்துச்சென்று அறிமுகப்படுத்தி வைத்தாராம்.
அப்போது சிவாஜி கணேசன் நாகேஷை பார்த்து “ஒரு பெரிய நடிகரோடு நாம் நடிக்கிறோம் என்ற பயத்தில் நடிப்பை கோட்டைவிட்டு விடாதே. தைரியமாக நடிக்க வேண்டும்” என்று அறிவுரை கூறிவிட்டு மீண்டும் செய்தித்தாளை படிக்கத் தொடங்கிவிட்டாராம்.
இதனை தொடர்ந்து நாகேஷ், சிவாஜி கணேசனை “சார்” என்று அழைத்தார். வெகு நேரம் கழித்துதான் சிவாஜி நாகேஷை திரும்பி பார்த்தாராம். அப்போது நாகேஷ் சிவாஜியிடம் “சார், நான் புது பையன் தான்னு நினைச்சி உங்களது நடிப்பை கோட்டிவிட்டு விடாதீர்கள்” என கூறினாராம். இதனை கேட்ட இயக்குனருக்கோ அதிர்ச்சி. ஆனால் சிவாஜி எந்த ரியாக்சனும் தரவில்லையாம்.
நடிகர் திலகத்தை சந்தித்த முதல் நாளே நாகேஷ் இவ்வாறு துடுக்காக பேசினாலும், அதன் பின் இருவரும் இணைந்து பல திரைப்படங்களில் நடித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.