Cinema History
கதாசிரியரை அவமானப்படுத்திய நாகேஷ் – பதிலுக்கு அவர் செய்ததுதான் ஹைலைட்
எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்தில் முன்னணி காமெடி நடிகராக இருந்தவர் நடிகர் நாகேஷ். ஒல்லியான தேகம், உடலை வளைத்து வளைத்து ஆடும் நடனம், டைமிங் காமெடி என ரசிகர்களை ரசிக்க வைத்தவர். அரசு வேலையை ராஜினாமா செய்துவிட்டு சினிமாவில் நுழைந்தவர்.
எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெய் சங்கர் உள்ளிட்ட பலரின் படங்களிலும் நாகேஷ் நடித்துள்ளார். சிவாஜி நடித்த திருவிளையாடல் படத்தில் ஒரே ஒரு காட்சியில் வந்து மொத்த பெயரையும் தட்டிச்சென்றவர். தமிழ் சினிமாவில் இருந்த மிகச்சிறந்த நடிகர்களில் நாகேஷ் முக்கியமானவர். காமெடி மட்டுமில்லாமல் ஹீரோ, குணச்சித்திரம், வில்லன் என பல்வேறு கதாபாத்திரங்களில் நாகேஷ் நடித்துள்ளார்.
இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருமான சித்ரமஹால் கிருஷ்ணமூர்த்தி என்பவரும் கதாசிரியர் பஞ்சு அருணாச்சலமும் நல்ல நண்பர்கள். கிருஷ்ணமூர்த்தி ஒரு படத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை எப்படி சரிசெய்வது என இருவரும் பேசிக்கொண்டிருந்த போது நாகேஷை வைத்து சிறிய பட்ஜெட்டில் ஒரு படம் எடுப்போம் என பஞ்சு அருணாச்சலம் சொல்ல அப்படி உருவான திரைப்படம்தான் ‘தேன் கிண்ணம்’. இந்த படத்தில் விஜயலலிதா நாகேஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார். படமும் வெற்றி பெற்றது.
மீண்டும் நாகேஷுக்கு பஞ்சு அருணாசலம் கதை வசனம் எழுதி, கிருஷ்ணமூர்த்தி தயாரித்து இயக்கி நாகேஷ் – விஜயலலிதா நடித்து வெளியான ‘ஹலோ பாட்னர்’ படமும் வெற்றி பெற்றது. அதன்பின் அதே கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் ‘கல்யாணமாம் கல்யாணம்’ என்கிற தலைப்பில் பஞ்சு அருணாச்சலம் கதை வசனம் எழுதி ஒரு படம் உருவானது. அந்த படத்திலும் நாகேஷை நடிக்க வைப்பது என முடிவெடுத்து அவரிடம் கதை சொல்ல பஞ்சு அருணாச்சலம் சென்றார்.
கதையை நாட்டமில்லாமல் கேட்ட நாகேஷ் ‘கதை நன்றாக இருக்கிறது. ஹலோ பாட்னர் படத்தில் அவ்வளவு காமெடி இல்லை. அந்த படத்தில் காமெடி இன்னமும் நன்றாக வந்திருக்க வேண்டும். அதனால், இந்த படத்திற்கு நீ வசனம் எழுத வேண்டாம். ஏ.எல் நாராயணன் எழுதட்டும்’ என சொல்ல, கோபத்தை காட்டிக்கொள்ளாத பஞ்சு அருணாச்சலம் ‘அதை தயாரிப்பாளரிடம் சொல்லுங்கள்’ என சொல்லிவிட்டு அங்கிருந்து வந்துவிட்டாராம்.
நேராக கிருஷ்ணமூர்த்தியிடம் சென்று ‘இந்த படத்திற்கு நாகேஷ் வேண்டாம். சோ-வை போட்டு எடுங்கள்’ என பஞ்சு அருணாச்சலம் சொல்ல அதேபோல் ஜெய் சங்கரும், சோ-வும் நடித்து அந்த படம் வெளியாகி வெற்றியும் பெற்றது.