படப்பிடிப்பிற்கு லேட்டாக வந்த சிவாஜி… “இதான் கேப்”… புகுந்து விளையாடி ஸ்கோர் செய்த நாகேஷ்…
நகைச்சுவை வேடம் மட்டுமல்லாது பன்முக கலைஞராகவும் திகழ்ந்தவர் நாகேஷ். எம் ஜி ஆர், சிவாஜி, ரஜினி, கமல் என தமிழின் டாப் ஹீரோக்களுடன் காமெடி ரோலில் நடித்த நாகேஷ், சில திரைப்படங்களில் நெகட்டிவ் ரோலிலும் நடித்துள்ளார். எடுத்துக்காட்டாக “அபூர்வ சகோதரர்கள்” என்ற திரைப்படத்தை கூறலாம். இவ்வாறு கிடைக்கிற இடத்தில் எல்லாம் ஸ்கோர் செய்த நாகேஷ், சிவாஜியுடன் அவர் நடித்த ஒரு திரைப்படத்தில் தனக்கு வாய்த்த ஒரு சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இப்போதும் ரசிக்கக்கூடிய ஒரு நகைச்சுவை காட்சியை உருவாக்கியிருக்கிறார்.
1965 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன், சாவித்திரி, நாகேஷ், முத்துராமன் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “திருவிளையாடல்”. சிவனின் திருவிளையாடல்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இத்திரைப்படம் அக்காலத்தில் மாபெரும் வெற்றித்திரைப்படமாக அமைந்தது. இத்திரைப்படத்தில் தருமி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார் நாகேஷ்.
“திருவிளையாடல்” திரைப்படத்தில் ஒரு பிரபலமான காட்சி உண்டு. அதாவது மன்னனுக்கு ஏற்பட்ட சந்தேகத்தை தீர்க்கும்படி ஒரு பாடலை இயற்றிவரும் புலவருக்கு 1000 பொற்காசுகள் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்படும்.
இந்த அறிவிப்பை கேட்ட நாகேஷ், கோவிலுக்கு வந்து புலம்புவார். அப்போது சிவனாக வரும் சிவாஜி கணேசன் அவர் முன் தோன்ற, மன்னருக்கு ஏற்பட்ட சந்தேகத்தை தீர்க்கக்கூடிய பாடல் ஒன்றை நாகேஷிடம் தருவார். அந்த பாடலை நாகேஷ் மன்னரிடம் பாட, அந்த பாடலில் பிழை இருப்பதாக நக்கீரர் கூறிவிடுவார்.
உடனே மீண்டும் கோவிலுக்கு வந்து சிவாஜி கணேசனை தேடுவார் நாகேஷ். அவர் இருக்கமாட்டார். அப்போது நாகேஷ், “வரமாட்டான், வரமாட்டான், அவன் எப்படி வருவான்” என புலம்பிக்கொண்டிருப்பார். இந்த காட்சி மிகவும் நகைச்சுவையான காட்சியாக அமைந்தது.
ஆனால் இந்த காட்சி ஸ்கிரிப்டில் எழுதப்படாத காட்சியாகும். படப்பிடிப்பின்போது சிவாஜி கணேசன் செட்டிற்கு வர தாமதம் ஆகியிருக்கிறது. இந்த தருணத்தை பயன்படுத்திக்கொண்ட நாகேஷ், இயக்குனரிடம் தான் புலம்புவது போல் நடிப்பதாகவும், இது நன்றாக இருந்தால் படத்தில் வைத்துக்கொள்ளுங்கள் எனவும் கூறியிருக்கிறார். அதன் பின் தானே புலம்புவது போல் நடித்துள்ளார்.
நாகேஷ் புலம்புவது மிகவும் நகைச்சுவையாக இருந்திருக்கிறது. இந்த காட்சி ஒர்க் அவுட் ஆகும் என்று நினைத்த இயக்குனார் அக்காட்சியை திரைப்படத்தில் பயன்படுத்திக்கொண்டார். ஒரு வேளை அன்று சிவாஜி சரியான நேரத்திற்கு வந்திருந்தால், இப்படிப்பட்ட ஒரு காட்சி உருவாகியிருக்காது.