Cinema History
நாகேஷின் தொழிலுக்கு வந்த பங்கம்… தெய்வமாக வந்து காப்பாற்றிய எம்.ஜி.ஆர்… ஒரு சுவாரஸ்ய சம்பவம்…
தமிழின் பழம்பெரும் நகைச்சுவை நடிகராக திகழ்ந்த நாகேஷ், சினிமாவில் ஒரு குறிப்பிடத்தக்க இடத்தை அடைந்த பிறகு, சென்னையின் தி நகர் பகுதியில் தனக்கு சொந்தமாக ஒரு திரையரங்கை கட்டினார். அந்த திரையரங்கிற்கு நாகேஷ் திரையரங்கம் என பெயரும் வைத்தார்.
ஆனால் அத்திரையரங்கத்தின் திறப்பு விழா நெருங்கிக்கொண்டிருந்த போது அவரது தலையில் இடி விழுந்தது போல் ஒரு பெரிய சிக்கல் எழுந்தது. அதாவது நாகேஷ் திரையரங்கம் சர்ச் பார்க் பள்ளியின் வாசலுக்கு எதிரே கட்டப்பட்டிருந்தது.
ஒரு பள்ளிக்கு எதிரே சினிமா திரையரங்கம் வந்தால், அப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் படிப்பின் மீது ஆர்வம் செலுத்தமாட்டார்கள் என்பதால் நாகேஷ் திரையரங்கத்திற்கு லைசன்ஸ் கிடைக்கவில்லை.
அத்திரையரங்கை திறக்கப்படாமல் போனால் நாகேஷிற்கு பெரும் பொருளாதார இழப்பு ஏற்படும். ஆதலால் மிகவும் கலங்கிப்போனாராம் நாகேஷ். அந்த காலகட்டத்தில் தமிழகத்தின் முதல்வராக இருந்தவர் எம்.ஜி.ஆர். நாகேஷ் பல திரைப்படங்களில் எம்.ஜி.ஆருடன் இணைந்து நடித்துள்ளார் என்பதை நாம் அறிவோம். மேலும் நாகேஷ் எம்.ஜி.ஆருக்கு மிகவும் நெருக்கமானவரும் கூட.
இந்த சிக்கலுக்கு தீர்வு காண வேண்டும் என்றால் நிச்சயமாக நாம் எம்.ஜி.ஆரைத்தான் சந்தித்தாக வேண்டும் என்று பலரும் நாகேஷுக்கு அறிவுரை கூறினார்கள். ஆதலால் நாகேஷ் எம்.ஜி.ஆரை சந்திக்க முடிவு செய்தார்.
அதன் படி ஒரு நாள் எம்.ஜி.ஆரை சந்திக்க அனுமதி கிடைத்தது. எம்.ஜி.ஆரின் அலுவலகத்திற்குச் சென்ற நாகேஷ், அவரிடம் தனக்கு நடந்த விஷயத்தை பற்றி கூறினார். உடனே எம்.ஜி.ஆர் “உனக்கு அறிவில்லையா? எந்த இடத்தில் திரையரங்கு கட்டினால் லைசன்ஸ் கிடைக்கும் என்ற விவரம் கூட தெரியாமலா திரையரங்கு கட்டுவது?” என கோபத்தில் கத்தினாராம்.
எம்.ஜி.ஆர் கோபத்தில் கத்தியதை எல்லாம் பொறுமையாக தலையை குனிந்தபடி கேட்டுக்கொண்டிருந்தாராம் நாகேஷ். சற்று நேரத்திற்கு பின் யோசித்த எம்.ஜி.ஆர் “சர்ச் பார்க் பள்ளி வாசலுக்கு எதிர்புறம் திரையரங்கு இருப்பதால்தானே பிரச்சனை என்று சொன்னாய்?” என கேட்டுவிட்டு “நீ போகலாம், இந்த பிரச்சனையை என்னிடம் விட்டுவிடு. நான் பார்த்துக்கொள்கிறேன்” என எம்.ஜி.ஆர் கூறினாராம்.
எம்.ஜி.ஆர் பிரச்சனையை பார்த்துக்கொள்வதாக கூறிவிட்டாலும் நாகேஷின் மனது நிம்மதி அடையவில்லை. இந்த திரையரங்கு திறக்கப்படாமல் போனால் பெரும் நஷ்டம் ஏற்படும் என்பதால் நாகேஷுக்கு பயத்தில் தூக்கம் வரவில்லை.
அடுத்த நாள் நாகேஷ் படப்பிடிப்பில் இருந்தபோது அவருக்கு எம்.ஜி.ஆரிடம் இருந்து தொலைப்பேசியில் அழைப்பு வந்தது. “உன்னுடைய பிரச்சனை தீர்ந்தது” என்று கூறி தொலைப்பேசியை வைத்துவிட்டாராம் எம்.ஜி.ஆர்.
நாகேஷிற்கு சந்தோஷத்தில் கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. ஆனால் இந்த பிரச்சனையை எப்படி எம்.ஜி.ஆர் சமாளித்தார் என்ற ஆர்வம் தொற்றிக்கொண்டது. உடனே நாகேஷ், தனது திரையரங்கம் கட்டப்பட்டிருந்த பகுதிக்குச் சென்றார்.
அங்கே சர்ச் பார்க் பள்ளியின் வாசலில் இருந்த கேட் மூடப்பட்டு, “மாற்று பாதையில் செல்லவும்” என எழுதியிருந்தது. அந்த பள்ளிக்கு பின் பக்கமாக மாற்றுப் பாதையில் இரண்டாவதாக ஒரு வாசல் இருந்தது. இனி அந்த இரண்டாவது வாசல் வழியாகத்தான் மாணவர்கள் பள்ளிக்குச் செல்லவேண்டும் என வழியுறுத்தப்படும் வகையில் அவ்வாறு எழுதியிருந்தது.
இதனை பார்த்த நாகேஷ் மகிழ்ச்சியில் பூரித்துபோனாராம். வீட்டிற்கு சென்றபிறகு எம்.ஜி.ஆரிடம் இருந்து நாகேஷுக்கு தொலைப்பேசியில் அழைப்பு வந்தது. “நீங்க தெய்வம் மாதிரி வந்து என்னை காப்பாத்திட்டீங்க. ரொம்ப நன்றி” என நெகிழ்ச்சியோடு கூறினாராம் நாகேஷ்.
அப்போது எம்.ஜி.ஆர் “ஒரு வகையில் நீயும் எனக்கு ஒரு விஷயத்தில் உதவியிருக்கிறாய்” என கூறினாராம். நாகேஷிற்கு ஒன்றுமே புரியவில்லை.
“அந்த பகுதி மிகவும் ஜனநெரிசலும் வாகன நெரிசலும் நிறைந்த பகுதி. ஆதலால் பள்ளி மாணவர்களுக்கு மிகவும் சிரமமாக இருப்பதாக எனக்கு பல நாட்கள் புகார் வந்த வண்ணம் இருந்தது. இப்போது மாணவர்கள் மாற்றுப்பாதையில் செல்வார்கள். இனி மாணவர்களுக்கு பெரிய சிரமம் ஏதும் இருக்காது. உன்னுடைய பிரச்சனையை தீர்க்கப்போய் இப்போது மாணவர்களின் பிரச்சனையும் தீர்ந்துவிட்டது. நல்ல விஷயம்தான்” என எம்.ஜி.ஆர் கூறினாராம்.
எம்.ஜி.ஆர் இவ்வாறு கூறிய பின் நாகேஷுக்கு இன்ப அதிர்ச்சியே ஏற்பட்டுவிட்டதாம். அதன் பின் சில நாட்களில் நாகேஷ் திரையரங்கத்தை எம்.ஜி.ஆரே திறந்து வைத்தாராம். ஆனால் இப்போது நாகேஷ் திரையரங்கம் இருந்த இடத்தில் வணிக வளாகம் வந்துவிட்டது.