Cinema History
சினிமா நடிகர்களுக்கு அடைமொழி வந்த காரணம் தெரியுமா
தமிழ் சினிமாவில் அடைமொழியுடன் சில நடிகர்கள் வருவார்கள். அவர்களுக்கு எதற்காக அந்த அடைமொழி ஏற்பட்டது என்றே பலருக்கு தெரியாது. தமிழின் பெரும்பாலான நடிகர்கள் அடைமொழியுடன் சினிமாவில் நடித்தவர்கள்தான் அவர்களை பற்றி பார்ப்போம்.
சிவாஜி கணேசன்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் திரையுலகம் வரும் முன்னரே மேடை நாடகங்களில் நடித்தார். சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் என்ற நாடகத்தில் பேரரசர் சிவாஜியாக நடித்த கணேசனின் நடிப்புத்திறனை போற்றிய தந்தை பெரியார், அவரை ‘சிவாஜி’ கணேசன் என்று அழைத்தார். அன்றிலிருந்து அந்த பெயரே நிலைத்தது.
ஜெமினி கணேசன்
இவர் புதுக்கோட்டையில் பிறந்தவர் இவரின் இயற்பெயர் இவரது இயற்பெயர் கணபதிசுப்ரமணியன் சர்மா என்பதாகும். பின்னர் இது ராமசாமி கணேசன் என்று மாற்றப்பட்டது. ஜெமினி ஸ்டுடியோவில் பணியாற்றி புகழ்பெற்றதால் ஜெமினி கணேசன் என்ற பெயர் சினிமாவில் இவருக்கு ஒட்டிக்கொண்டது.
சீர்காழி கோவிந்தராஜன்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை பூர்விகமாக கொண்டவர் இவர். பல பக்திபாடல்களையும், சினிமாப்பாடல்களையும் பாடியுள்ளார் சினிமாவில் நடித்துள்ளார் ஊர்பெயரே சீர்காழி கோவிந்தராஜன் என பெயர் இவரோடு ஒட்டிகொண்டது.
நிழல்கள் ரவி
கோவையை பூர்விகமாக கொண்ட ரவி பாரதிராஜாவின் நிழல்கள் படத்தில் நடித்ததால் அவருக்கு நிழல்கள் ரவி என்ற பெயர் ஒட்டிக்கொண்டது.
யோகி பாபு
அமீர் நடித்து சுப்பிரமணிய சிவா இயக்கத்தில் வந்த யோகி படத்தில் நடித்ததால் தற்போதைய புகழ்பெற்ற காமெடி நடிகரான பாபுவின் பெயர் யோகிபாபு என்று மாறியது.
அல்வா வாசு
சத்யராஜ் நடித்த அமைதிப்படை படத்தில் நடித்ததாலும் அதில் வரும் கஸ்தூரி அல்வா கொடுக்கும் புகழ்பெற்ற காட்சியில் நடித்ததாலும் இவர் அல்வா வாசு என்று அழைக்கப்பட்டார்.
தேங்காய் சீனிவாசன்
பல படங்களில் நடித்து ப்ளாக் அண்ட் ஒயிட் காலங்களில் புகழ்பெற்ற தேங்காய் சீனிவாசன், கல்யாணம் என்ற நாடகத்தில் நடித்தபோது இவரின் நடிப்பை பார்த்த காமெடி நடிகர் தங்கவேலு இவரை இனி நாம் தேங்காய் சீனிவாசன் என்றுதான் அழைக்க வேண்டும் என்று சொன்னதன் விளைவாக தேங்காய் இவரோடு ஒட்டிக்கொண்டது.
ஒருவிரல் கிருஷ்ணாராவ்
அந்தக்காலத்தில் வந்த புகழ்பெற்ற த்ரில்லர் படம் ஒரு விரல் இந்த படத்தில் நடித்ததன் மூலம் ஒரு விரல் கிருஷ்ணாராவ் என்ற பெயர் இவருக்கு ஏற்பட்டது.இவர் பல தமிழ் படங்களில் காமெடி செய்து புகழ்பெற்றவர்.
பசி நாராயணன்
70களில் புகழ்பெற்ற இயக்குனர் துரை இயக்கிய பசி படம் மிகப்பெரும் வெற்றி பெற்றது. பல அவார்டுகளை குவித்தது. இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து புகழ்ப்பெற்றவர் நாராயணன். பசி படத்தில் நடித்ததால் பசி நாராயணன் என்ற பெயர் இவரோடு ஒட்டிகொண்டது.
படாபட் ஜெயலட்சுமி
இவர் 70களின் இறுதியில் இளவயதிலேயே மரணம் அடைந்தார். பாலச்சந்தர் இயக்கிய அவள் ஒரு தொடர்கதை படத்தில் இடம்பெற்ற என்னடி உலகம் என்ற படத்தில் அடிக்கொரு முறை படாபட் படாபட் என்று சொல்லிக்கொண்டே இருப்பார் அதனால் இந்த பெயர் இவருக்கு ஒட்டிக்கொண்டது.
வெண்ணிற ஆடை நிர்மலா
ஸ்ரீதர் இயக்கிய வெண்ணிற ஆடை என்ற படத்தில் முதன் முதலில் நடித்ததால் இவருக்கு வெண்ணிற ஆடை நிர்மலா என்ற பெயர் வந்தது.
வெண்ணிற ஆடை மூர்த்தி
தமிழ் சினிமாக்களில் டபுள் மீனிங் காமெடிகளில் புகழ்பெற்றவர். புர்ர் என்று சப்தம் செய்து சிரிப்பை வரவைப்பவர் இவர் . இவரும் வெண்ணிற ஆடை படத்தில் நடித்ததன் மூலம் சாதா மூர்த்தியான இவர் வெண்ணிற ஆடை மூர்த்தியாக மாறினார்.
பூவிலங்கு மோகன்
கவிதாலயா தயாரிப்பில் அமீர்ஜான் இயக்கத்தில் வெளிவந்த பூவிலங்கு படத்தில் அறிமுகம் ஆனதால் இவர் பூவிலங்கு மோகன் என அழைக்கப்பட்டார். அந்த நேரத்தில் மோகன் என்ற நடிகர் நடித்து கொண்டிருந்ததால் பெயர் குழப்பம் வரக்கூடாது என பூவிலங்கு மோகன் என அழைக்கப்பட்டார்.
பக்கோடா காதர்
நாகேஷ் நடித்து வெளிவந்த காமெடிப்படமான மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி படத்தில் பக்கோடா கேட்டு அழும் பையனாக நடித்தவர் இவர். அதனால் இந்த பெயர் இவரோடு ஒட்டிக்கொண்டது.நல்ல திறமையான காமெடி நடிகர் இவர்.
சில்க் ஸ்மிதா
ஆந்திராவில் உள்ள காக்கிநாடாவில் பிறந்து தமிழில் கவர்ச்சி வேடங்களில் கலக்கி பலரை சொக்க வைத்தவர் மறைந்த நடிகை சில்க் ஸ்மிதா . முதன் முதலில் இவர் நடித்த வண்டிச்சக்கரம் படத்தில் சில்க் என்ற சாராய வியாபாரியாக நடித்ததால் அவரது பெயர் ஸ்மிதாவோடு சில்க் ஒட்டிக்கொண்டது.
இன்னும் எண்ணற்ற கலைஞர்கள் உள்ளனர். பதிவு மிக நீளமாக செல்லும் என்ற காரணத்தால் அடுத்தடுத்த பதிவுகளில் அவற்றை காணலாம்.