80, 90களில் தேசிய விருதைக் கைப்பற்றிய தமிழ்ப்படங்களில் உள்ள சுவாரசியம் என்னென்ன தெரியுமா?
தமிழ்ப்படங்களில் ரசிக்க வைக்கும் படங்களை கலைப்படங்கள் என்று சொல்வார்கள். அதை விருதுக்குரிய படங்களாகவும் தேர்ந்தெடுப்பார்கள்.
அப்படிப்பட்ட படங்களை கலைக்கண்ணோட்டத்துடன் உள்ளவர்கள் மட்டுமே ரசிப்பார்கள். மற்ற தரப்பினர் படம் சுமார் என்று சொல்வார்கள். தேசிய விருது பெற்ற ஒரு சில பழைய படங்களையும் அந்தப்படங்களில் உள்ள சிறப்பம்சங்கள் குறித்தும் இங்கு பார்ப்போம்.
தண்ணீர் தண்ணீர்
இந்தப்படங்களைப் பற்றிப் பார்க்கும்போது இயக்குனர் சிகரம் பாலசந்தரை எடுத்துக்கொண்டால் அவரது அற்புதமான படைப்பான தண்ணீர் தண்ணீர் படத்தைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும். கோமல் சுவாமிநாதனின் நாடகம் படமாக்கப்பட்டு இருக்கிறது. சரிதா, ராதாரவி, சார்லி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தண்ணீரால் பஞ்சத்திற்குள்ளாகும் கிராமத்தினரின் உணர்வுகளைப் படம் அற்புதமாக பிரதிபலித்துள்ளது. 1981ல் எடுத்த இந்தப்படம் இப்போதுள்ள பிரச்சனைகளுக்கும் பொருந்தும் அளவு எடுக்கப்பட்டுள்ளது. வெகு தூரம் சென்று தண்ணீரை சுமந்து வரும் பெண்கள் படும் பாட்டை வெகு அழகாக எடுத்துள்ளார்.
வசனங்கள் சூப்பர். தண்ணீர் இல்லாமப் போனால் என்னென்ன பிரச்சனைகள் எல்லாம் வரும் என்பதை காட்சிக்கு காட்சி சுவாரசியமாக உணர்ச்சிப்பூர்வமாக எடுத்திருப்பார் கே.பாலசந்தர். சிறந்த இயக்கம், சிறந்த திரைக்கதை என 2 தேசிய விருதுகளை இந்தப்படம் பெற்றது.
நெஞ்சத்தைக் கிள்ளாதே படத்தை இயக்குனர் மகேந்திரன் செம சூப்பராக எடுத்திருப்பார். சுஹாசினி, சரத்பாபு, பிரதாப் போத்தன், மோகன், வெண்ணிற ஆடை மூர்த்தி, குமரி முத்து உள்பட பலர் நடித்துள்ளனர். இளையராஜாவின் இன்னிசையில் பாடல்கள் அனைத்துமே சூப்பர். ஹே தென்றலே, பருவமே புதிய பாடல் பாடு, உறவெனும், மம்மி பேரு ஆகிய பாடல்கள் உள்ளன.
இந்தப்படம் தவிர பாலசந்தரின் அச்சமில்லை, அச்சமில்லை படத்திற்கும் தேசிய விருது கிடைத்தது.
மௌனராகம்
1986ல் வெளியான படம் மௌனராகம். கார்த்திக், மோகன், ரேவதி, வி.கே.ராமசாமி உள்பட பலர் நடித்துள்ளனர். இன்னிசை சக்கரவர்த்தி இளையராஜாவின் இசையில் பாடல்கள் சூப்பர்ஹிட்.
ஓகோ மேகம் வந்ததோ, நிலாவே வா, சின்ன சின்ன வண்ணக்குயில், பனிவிழும் இரவு, மன்றம் வந்த தென்றலுக்கு ஆகிய பாடல்கள் இன்று வரை மனதை லேசாக்குகின்றன. காதலுக்கும், குடும்பத்திற்கும் இடையே நடக்கும் உணர்வுகளை உணர்ச்சிப்பூர்வமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் மணிரத்னம்.
காதலுக்காக விவாகரத்து கோருவது படத்தின் உச்சக்கட்டம். மணிரத்னத்தின் அஞ்சலி, நாயகன் படத்திற்கும் தேசிய விருது கிடைத்தது.
வீடு
கல்யாணம் பண்ணிப்பார். வீட்டைக் கட்டிப்பார் என்று ஒரு சொலவடை உள்ளது. இதில் 2வது தான் இந்தப்படத்தின் மையக்கரு.
1988ல் வெளியான இந்தப்படத்தை பாலுமகேந்திரா இயக்கியுள்ளார். நடுத்தரக் குடும்பப் பெண் ஒருவர் சொந்தமாக ஒரு வீடு கட்டும்போது என்னென்ன பிரச்சனைகளை சந்திக்கிறார் என்பதை வெகு யதார்த்தமாக எடுத்துள்ளார் இயக்குனர்.
இந்தப்படத்தில் சுதாவாக அர்ச்சனா நடித்துள்ளார். பானுசந்தர், சொக்கலிங்க பாகவதர், செந்தாமரை, ஒரு விரல் கிருஷ்ணராவ் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப்படத்தைப் பற்றி இயக்குனர் கூறுகையில் தனது தாய் வீடு கட்டும்போது பட்ட கஷ்டங்களையே தான் இந்தப்படமாக எடுத்திருக்கிறேன் என்கிறார்.
இசைஞானி இளையராஜா இருந்தும் இப்படத்தில் பாடல்களே இல்லை என்பது தான் ஆச்சரியம். இந்தப்படத்திற்கு 2 தேசிய விருதுகள் கிடைத்தன. சிறந்த தமிழ்ப்படத்திற்கான தேசிய விருதும், சிறந்த நடிகைக்கான தேசிய விருது அர்ச்சனாவுக்கும் கிடைத்தது. இந்தப்படம் தவிர பாலுமகேந்திராவின் வண்ண வண்ண பூக்கள் படத்திற்கும் தேசிய விருது கிடைத்தது.
புதிய பாதை
தமிழ்சினிமா உலகிற்கு ஒரு புதிய பாதையைப் போட்டு இருக்கிறார் பார்த்திபன். 1989ல் பார்த்திபன் இயக்கி நடித்த பம். பார்த்திபன், சீதா, வி.கே.ராமசாமி, மனோரமா, நாசர், ஸ்ரீதர், வெண்ணிற ஆடை மூர்த்தி உள்பட பலர் நடித்துள்ளனர்.
சந்திரபோஸின் இசை படத்தை வருடுகிறது. யாரப்பத்தியும், அப்பன் யாரு, தலைவா, பச்சப்புள்ள, கண்ணடிச்சா ஆகிய பாடல்கள் உள்ளன. இந்தப்படத்திற்கு 2 தேசிய விருதுகள் கிடைத்தன. இந்தப்படம் தவிர பார்த்திபனின் ஹவுஸ்புல் படத்திற்கும் தேசிய விருது கிடைத்தது.
தேவர்மகன்
1992ல் வெளியான இந்தப்படத்தை கமல் தயாரித்து, திரைக்கதை, வசனம் எழுதி நடித்து இருந்தார். பரதன் இயக்கியுள்ளார். இந்தப்படத்தில் கமலுடன் செவாலியே சிவாஜிகணேசனும் இணைந்து நடித்துள்ளார். 5 தேசிய விருதுகள் பெற்றது.
ஆஸ்கர் விருதுக்கும் பரிந்துரை செய்யப்பட்டது. கமல், சிவாஜி கூட்டணியுடன் கௌதமி, ரேவதி, நாசர், காகா ராதாகிருஷ்ணன், தலைவாசல் விஜய், வடிவேலு, மதன்பாபு உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப்படத்தில் சாதிக்கலவரத்தையும், மோதலையும் தத்ரூபமாக படமாக்கியுள்ளனர்.
ஆற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடி வந்து குடிசைப்பகுதிகளை சேதப்படுத்துவதை வெகு நேர்த்தியாக எடுத்துள்ளனர். படத்தின் அத்தனை கதாபாத்திரங்களின் நடிப்பும் சூப்பர். தற்போது இதன் 2ம் பாகம் தயாராவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இளையராஜாவின் இன்னிசையில் பாடல்கள் அனைத்தும் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பின.
சாந்துப்பொட்டு, போற்றிப்பாடடி பொண்ணே, வானம் தொட்டு, அட புதியது பிறந்தது, இஞ்சி இடுப்பழகா, மாசறு பொன்னே, மணமகளே, வெட்டறுவா ஆகிய பாடல்கள் உள்ளன.
இவை தவிர 90களில் பாரதிராஜாவின் அந்திமந்தாரை, அகத்தியனின் காதல் கோட்டை படங்களும் தேசிய விருதுகளை கைப்பற்றியுள்ளன.