நயன்தாராவின் திடீர் முடிவால் கலக்கத்தில் தயாரிப்பாளர்கள்.....
பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஒரே ஒரு நடிகை என்றால் அது நயன்தாரா மட்டுமே. முன்னணி நடிகர்களுக்கு இணையாக நயன்தாராவின் படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைப்பதோடு, வசூல் ரீதியாகவும் லாபம் ஈட்டி வருகிறது. எனவே தான் நயன்தாராவை தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்கள் செல்லமாக அழைத்து வருகிறார்கள்.
ஆரம்ப காலத்தில் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து பாடலுக்கு நடனம் ஆடி வந்த நயன்தாரா, சமீபகாலமாகவே கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார். அப்படியே முன்னணி ஹீரோவுடன் ஜோடி சேர்ந்து நடித்தாலும், ஹீரோவுக்கு இணையாக இவருக்கும் வெயிட்டான கதாபாத்திரம் இருந்தால் மட்டுமே அப்படத்தில் நடிக்க ஒப்புக் கொள்கிறார்.
தற்போது நயன்தாரா அவரது காதலரும், இயக்குனருமான விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் எனும் படத்திலும், அட்லி - ஷாருக்கான் கூட்டணியில் உருவாகி வரும் புதிய ஹிந்திப் படத்திலும் நடித்து வருகிறார். நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருவதும், இருவரும் திருமணம் செய்துகொள்ளாமல் ஒன்றாக வாழ்ந்து வருவதும் நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.
இவர்கள் இருவரும் இணைந்து ரெளடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி அதன் மூலம் பல படங்களை தயாரித்து வருகிறார்கள். தற்போது விக்னேஷ் சிவன் இயக்கி வரும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தையும் இவர்களின் ரெளடி பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரித்து வருகிறது.
இந்நிலையில் நயன்தாரா திடீரென ஒரு முடிவெடுத்துள்ளாராம். அதன்படி, இனிமேல் வெளி நிறுவன படங்களில் நடிக்க வேண்டாம் என முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அவர் சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் படங்களில் மட்டுமே நடிக்கவுள்ளதாகவும், வெப் தொடருக்கு மட்டும் பெரிய நிறுவனங்களுடன் கைக்கோர்க்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.