எந்திரன் படத்தின் ஹீரோ யாரு?- ரஜினியிடமே வந்து கேட்ட நபர்.. சிறப்பான தரமான சம்பவம்..
கடந்த 2010 ஆம் ஆண்டு ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் “எந்திரன்”. இத்திரைப்படத்தை ஷங்கர் இயக்கியிருந்தார். தமிழின் ஆகச்சிறந்த பிரம்மாண்ட திரைப்படமாக இத்திரைப்படம் அமைந்தது. ஆங்கிலத் திரைப்படத்திற்கு இணையான பல நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ரசிகர்களை அசரவைக்கும் விதமாக இத்திரைப்படத்தை உருவாக்கியிருந்தார் ஷங்கர்.
இந்த நிலையில் இத்திரைப்படம் வெளிவருவதற்கு முன்பு ரஜினிகாந்த் தனக்கு நேர்ந்த ஒரு சம்பவத்தை அப்போதைய விழா ஒன்றில் நகைச்சுவையாக பகிர்ந்திருந்தார். அதாவது “எந்திரன்” திரைப்படத்தின் உருவாக்கத்தின் போது இடையில் ஒரு முறை ரஜினிகாந்த், பெங்களூரில் உள்ள தனது சகோதரரின் வீட்டிற்கு சென்றிருக்கிறார்.
அப்போது பக்கத்து வீட்டில் வசித்து வந்த ராஜஸ்தானியை சேர்ந்த நந்துலால் என்ற 60 வயதுக்கும் மேற்பட்ட முதியவர் ஒருவர் ரஜினியிடம் வந்து “எப்படி இருக்கிறாய் ரஜினி?” என கேட்டிருக்கிறார்.அதற்கு ரஜினி “நன்றாக இருக்கிறேன்” என கூறியிருக்கிறார். இதன் பின் இருவருக்கும் நடைபெற்ற உரையாடல்கள் இதோ…
நந்துலால்: என்ன ரஜினி, முடியெல்லாம் கொட்டிப்போயிருக்கிறது?
ரஜினி: ஆமாம்! எல்லாம் கொட்டிப்போச்சு.
நந்துலால்: ரிட்டையர்ட் வாழ்க்கை, நன்றாக போய்க்கொண்டிருக்கிறதா?
ரஜினி: இல்லை, நான் இப்போது ஒரு படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறேன்.
நந்துலால்: அப்படியா? என்ன படம்?
ரஜினி: ரோபோ (எந்திரன்).
நந்துலால்: ஓ அப்படியா! நல்ல விஷயம்.
ரஜினி: ஐஸ்வர்யா ராய் தான் ஹீரோயின்.
நந்துலால்: ஓ ஐஸ்வர்யா ராய்தான் ஹீரோயினா? நல்ல நடிகை. அது சரி, ஹீரோ யார்?
இவ்வாறு அவர் கேட்டவுடன், ரஜினிக்கு தர்மசங்கடமாக இருந்திருக்கிறது.
ரஜினி: நான் தான் ஹீரோ.
நந்துலால்: என்னது, நீ ஹீரோவா?
இவ்வாறு நந்துலால் கேட்டபோது அவருடன் இருந்த சிறுவர்கள் இவர் தான் ஹீரோ என கூறியிருக்கிறார்கள். அதன் பின் சில நிமிடங்கள் அவர் ரஜினியிடம் பேசவே இல்லையாம்.அவர் கிளம்பிச் சென்ற பின் வீட்டிற்கு வெளியே இருந்து நந்துலால் பேசுவது ரஜினியின் காதில் கேட்டிருக்கிறது.
அதாவது நந்துலால் “இந்த ஐஸ்வர்யா ராய்க்கு என்னதான் ஆச்சு? அபிஷேக் பச்சனுக்குதான் என்ன ஆயிற்று? அவரை கூட விடுங்கள், அமிதாப் பச்சனுக்குதான் என்ன ஆயிற்று?” என பேசியிருக்கிறார்.
இச்சம்பவத்தை மிகவும் நகைச்சுவையாக ரஜினிகாந்த் கூறும்போது அரங்கமே சிரிப்பலையில் அதிர்ந்தது. அதன் பின் ரஜினிகாந்த், அந்த விழாவில் அமர்ந்திருந்த ஐஸ்வர்யா ராயை பார்த்து “ என்னுடன் நடித்ததற்கு மிகவும் நன்றி” என கேலியோடு கூறினார்.